இன்று நான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் பற்றி அறிந்து கொண்டேன். நான் உண்மையில் அந்த நபரை நேரில் பார்த்து அவர் அதிலிருந்து வெளியில் வர உதவவேண்டும் என்று விரும்பினேன். நான் இப்பொழுது இருக்கும் இடத்திலிருந்து அங்கே செல்வது சாத்தியமில்லாததால், என்னுடைய செய்தியைத் தெரிவிப்பதற்கு இந்த வலைப்பதிவைத் தேர்வு செய்தேன். இந்த மனஅழுத்தத்தால் அவதிப்படும் பல மனிதர்களை எனக்குத் தெரியும். சிலர் மிக மோசமாகப் பாதிப்படைந்து தங்கள் வேலைகளை விட்டு விட்டு கிட்டத்தட்ட தனிச்சிறையில் இருப்பது போன்று தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே தங்கிவிட்டனர். இந்த நிலையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு அவர்களில் சிலருக்கு பல மாதங்களாக மணிக்கணக்கில் உதவி செய்திருக்கிறேன்.

ஒருவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அவர்களுடைய உற்றார், உறவினர்களுக்கும் இதே அனுபவம் ஏற்படுகின்றது. ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அனுசரணையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களும் தங்கள் மன அழுத்தத்தை வெளிப்படுத்தத் தொடங்கினால், நோயாளி இன்னும் அதிகமாக அவதிப்படுவார். இந்தப் பதிப்பில் நான் மனஅழுத்தம் என்றால் என்ன, அதன் காரணம் மற்றும் சிகிச்சை பற்றி கவனம் செலுத்தப் போகிறேன். ஒரே வலைப்பதிவில் இந்தத் தலைப்பு பற்றிய விவரங்களை விரிவாக சொல்லி முடிப்பது ஒரு சவாலே ஆகும். ஆனாலும் நான் முயற்சிக்கிறேன். ஒரு நீண்ட பதிப்பிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

நான் உங்களுக்கு என்னுடைய கண்ணோட்டத்தை வழங்கும் முன் சில முக்கிய விவரங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். பின்வருமாறு:

நான் தியானத்தில் சிறப்புமிக்கவர், மருத்துவத்தில் அல்ல என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். இங்கே எனது அபிப்ராயமானது பல வருடங்களின் யோகப் பயிற்சி (கிரியா), தியானம் மற்றும் பல மாதங்களின் தீவிரமான நடைமுறைப்படுத்துதல் இவைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய தியானத்தின் ஒரே நோக்கம் மனதின் உண்மையான இயல்பை அனுபவிப்பதும், அதன் இயற்கை நிலையின் விளைவாக மனதில் தோன்றும் புதிர்களை விவரிப்பதுவும் ஆகும்; மூளை அல்ல, உடல் அல்ல, மனம் தான்.

இந்தப் பதிப்பில் உள்ள விஷயங்கள் முதன்மையாக மற்றும் நேரடியாக நான் தியானத்தின் சமாதி நிலையில் இருக்கும் போது என்னுள் மடைதிறந்து வந்த அறிவை அடிப்படையாகக் கொண்டவை. என்னுடைய கருத்தை நன்கு தெளிவுபடுத்த வேத நூல்களில் இருந்து விஷயங்களை எடுத்துள்ளதால் அதிக சமஸ்கிருத பதங்களையும், மனஅழுத்தத்துடன் தங்கள் சொந்த வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவியபோது எனக்குக் கிடைத்த அனுபவங்களில் இருந்தும் தகவல்களைக் கையாண்டுள்ளேன். இந்த உலகை நீங்கள் என் கண்களால் பார்க்க முடியுமென்றால், உடனடியாக அங்கு தெரியும் இயற்கைக்காட்சிகளும் மாறிவிடும். உங்களுக்கு எனது பார்வை கிடைக்க, நான் என்ன செய்கிறேனோ அதையே நீங்களும் செய்ய வேண்டும்; மற்றவையெல்லாம் பின்னால் தொடர்ந்து வரும். இதில் உள்ள செய்தியைப் புரிந்து கொள்ள இந்தப் பதிப்பைப் பல முறை படிக்கவும்.

மனஅழுத்தம் என்றால் என்ன?

மனஅழுத்தம் என்பது மனதின் ஒரு நிலையாகும். இது ஒரு உடல் உபாதை அல்ல; இது ஒரு நரம்பியல் கோளாறும் அல்ல. மேலும் இது மிகவும் அரிதாகவே மூளையின் ஒரு தவறான இயக்கமாக இருக்கிறது. இது கண்டிப்பாக மனதின் ஒரு நிலையாக மட்டுமே உள்ளது. மனமானது உங்களது முழு உடலிலும் அதற்கு அப்பாலும் பரவியுள்ளது. இந்த காரணத்தினால் தான் மனதின் அமைதியின்மை நம்மை முழுவதுமாக சோர்வடையச் செய்வது போல், மனதை அமைதிப்படுத்தினால் முழு உடலும் அமைதி அடைகிறது.

மனஅழுத்தத்தின் தீவிரத்தை நோயாளியின் செயல்களில் இருந்து உறுதிப்படுத்த முடியும். நோயாளி என்ற பதத்தை நான் உபயோகித்திருப்பது உண்மையிலேயே ஒரு முறணான செயல் தான். மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் “நோயாளி” என்று ஒருவர் இருக்க முடியாது, ஏனெனில் பாதிக்கப்படுவதற்கு அது ஒரு “நோய்” அல்ல. இது ஒரு சாதாரண, பொருத்தமின்றி மோதிக்கொள்ளும் மனதின் சுவடுகள் (வாசனா) ஆகும். இது மனோபாவம் என்றும் கூறப்படுகிறது. மனம் தவறாக வேலை செய்ய முடியாது ஏனென்றால் மனதின் உண்மையான இயல்பு தூய ஆனந்தம்; அனைத்து உட்பிரிவுகளுக்கும், இரட்டைகளுக்கும் (த்வந்தா) அப்பாற்பட்டது. நல்லது-கெட்டது, சரி-தவறு, உண்மை-பொய் மற்றும் இதைப் போன்ற குறியீடுகள் இரட்டைகளுக்கான உதாரணங்கள் ஆகும்.

மனஅழுத்தத்தின் தீவிரத்தை சரியாகத் தீர்மானிக்கும் பொருட்டு பின்வரும் பகுதியை தயவு செய்து கவனமாகவும், பொறுமையாகவும் படியுங்கள். நான் எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன் ஆனால் நாம் ஒரு சிக்கலான விஷயத்தைக் கையாண்டு கொண்டிருக்கிறோம். எனவே, இதன் பொருளை முழுமையாக கிரகித்துக் கொள்வதற்கு, எத்தனை முறை தேவையோ அத்தனை முறை திரும்பத்திரும்ப படியுங்கள்.

உங்களுக்கு மூன்று உடல்கள் இருக்கின்றன. அவையாவன, பௌதீக உடல் (ஸ்தூல சரீரம்), நுட்ப உடல் (சூக்ஷ்ம சரீரம்) மற்றும் காரண உடல் (காரண சரீரம்) ஆகும். உங்களது ஸ்தூல உடலானது தசை, எலும்பு போன்றவற்றால் ஆன பௌதீக உடலாகும். உங்களது சூக்ஷ்ம உடலானது உணர்வு மற்றும் உணர்ச்சிகளின் ஒரு கலவையாகும். உங்களது காரண உடலானது ஆன்மாவைக் (சுயம் அல்லது மனம் என்று வாசிக்கவும்) கொண்டதாகும்.

காரண உடல் மற்ற இரண்டு உடல்களையும் தாங்குகிறது. இந்த மூன்று உடல்களும், ஐந்து உறைகளுடன் (கோஸம்) இணைந்து வேலை செய்கின்றன. அவைகள், உருவம் (அன்னமய கோஸம்), மனம் (மனோமய கோஸம்), வாழ்க்கைச் சக்தி (பிராணமய கோஸம்), ஞானம் (விஞ்ஞானமய கோஸம்) மற்றும் பேரின்பம் (ஆனந்தமய கோஸம்). இவைகள் ஒன்றாக இணைந்து உங்களது உடலின் ஐந்து அடிப்படை சக்திகளைப் (வாயு) பாதிக்கின்றன. அவையாவன, முக்கிய வாழ்க்கை சக்தி (பிராண வாயு), கீழ் நோக்கி இறங்கும் சக்தி (அபான வாயு), மேல் நோக்கி உந்தும் சக்தி (உதான வாயு), வெப்ப சக்தி (சமான வாயு) மற்றும் ஊடுருவும் சக்தி (வ்யான வாயு) ஆகும்.

ஆற்றல்களைத் தவறாகக் கையாளுதல், அந்த உறைகளின் நிலையையும், மூன்று வகை உடல்களையும் மற்றும் இதற்கு நேர்மாறாகவும் பாதிக்கக்கூடும். உங்கள் உடலில் நடப்பவை எல்லாமே மேற்கூறப்பட்டவைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதிப்பில் ஆற்றல்கள் மற்றும் உறைகளைப் பற்றி விளக்கினால் அது ஒரு புத்தகமாகிவிடும். அதனால் அவைகளை விளக்கப் போவதில்லை. எனினும், சுருக்கமாக மூன்று உடல்களைப் பற்றியும், அனைத்து உடல் உருப்புகள் மற்றும் மனநிலை ஆகியவற்றிற்கு அவைகளுடனான தொடர்பினைப்பற்றியும், அவைகளின் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகளையும் விளக்குகிறேன்.

ஸ்தூல உடல் (பௌதீக உடல்)

ஆயுர்வேதம் மற்றும் பல யோக நூல்களின் படி, உங்களது ஸ்தூல உடல் ஏழு முக்கிய பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவையாவன, எச்சில் (ரஸா), இரத்தம் (ரக்தா), சதை (மாம்ஸா), கொழுப்பு (மேதா), எலும்புகள் (அஸ்தி), மஜ்ஜை (மஜ்ஜா) மற்றும் படைப்பாற்றல் திரவம் (ஸுக்ரா). காற்று (வடா), பித்த நீர் (பித்தா), மற்றும் கபம் (கபா) ஆகிய மூன்று நீர்மங்களின் கலவையைக் கொண்டு நீங்கள் உட்கொள்ளும் உணவு, நீங்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து — அனுபவிக்கும் கொழுப்பு மிகுந்த இனிப்பு வரை அனைத்தையும் எப்படி கையாள வேண்டும் என்று உங்கள் உடல் தீர்மானிக்கிறது.

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற காரணிகளை இந்த ஐந்து ஆற்றல்கள் பாதிக்கின்றன. இது முற்றிலும் ஸ்தூல உடலின் கண்ணோட்டத்தில் இருந்தே ஆகும். ஸ்தூல உடல் உணவை பதப்படுத்தியதும், நுட்ப உடல் (உணர்வு என்று வாசிக்கவும்), அதன் சொந்த நிலையைப் பொறுத்து எப்படி உணவு உங்களது ஸ்தூல உடலைப் பாதிக்கிறது என்று தீர்மானிக்கிறது. இந்தக் காரணத்தால் தான் சிலர் மிகச் சிறிய அளவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு நிறைய குவிந்து விடுகிறது மற்றும் சிலர் அதிகமாக சாப்பிட்டாலும் கூட எடை கூடுவதில்லை.

நுட்ப உடல் (உணர்வு)

எளிமையாகச் சொன்னால் உணர்வு நிலையின் மற்றொரு பெயர் நுட்பஉடல் என்பதாகும். எந்த காலக்கட்டத்திலும் உங்களது உணர்வு இந்த ஐந்து நிலைகளில் ஒன்றாகத் தான் இருக்க முடியும். அவையாவன, உணர்வுநிலை (சைதன்யா), ஆழ்நிலை (உபசைதன்யா), மயக்கநிலை (அனாசைதன்யா), உணர்வற்றநிலை (அசைதன்யா) மற்றும் அதிஉன்னத நிலை (பராசைதன்யா) ஆகும். மேலும், நீங்கள் கனவு நிலை (ஸ்வப்னா), விழித்திருக்கும் நிலை (ஜாக்ரதா), தூங்கிக்கொண்டிருக்கும் நிலை (ஸூஷூப்தா) அல்லது ஆழ்நிலையில் (துரியா) இருக்க முடியும்.

மீண்டும், இப்போது சுருங்கச் சொல்வதைப் பாதுகாக்க மற்றொரு முறை இந்த விதிமுறைகளைப் பற்றி விரிவாகக் கூறுவேன். இப்போது இந்த விதிமுறைகளைப்பற்றிய ஒரு முழுமையான பார்வை உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன். இந்த நுட்ப உடலில் தான் உங்களுடைய எல்லா உணர்வுகளும் அடங்கி உள்ளன. உடலின் அனைத்து அனிச்சைச் செயல்களான இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம் இவை போன்றவைகள் நுட்ப உடலினால் ஏற்படும் தாக்கமே ஆகும். நுட்ப உடலின் கட்டுப்பாடு உடலின் அனைத்து அனிச்சைச் செயல்களின் மேலும் உங்களுக்கு நேரடி கட்டுப்பாட்டைக் கொடுக்க முடியும். எனது சொந்த அனுபவத்தால் இதை நான் சொல்கிறேன். ஆய்வக சோதனைகள் மூலம் என்னால் இதை நிரூபிக்க முடியும்.

காரண உடல் (ஆத்மா)

உங்களது உணர்வு மற்றும் உடல் இருப்பிற்கு காரண உடல் நேரடிப் பொறுப்பாக இருக்கிறது. நாம் கறைபடிந்த ஆடைகளைத் துறந்து புதியவற்றை அணிவதுபோல் ஆத்மாவானது மரணத்திற்குப் பின்னர் ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்குப் பயணம் செய்கிறது என்று பல யோக நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அது மட்டுமே அனைத்தும் அல்ல; ஆன்மா தனியாக பயணம் செய்வதில்லை. அதனுடன் மனதின் போக்கும் (சித்த விருத்தி) செல்கிறது. காதுகள், தோல், நாக்கு, கண்கள் மற்றும் மூக்கு இவைகளின் உதவியுடன் வெளிப்புற அறிய நிகழ்வுகளான ஒலி (சப்தம்), தொடுஉணர்ச்சி (ஸ்பர்ஷா), சுவை (ரஸா), வடிவம் (ரூபா), மற்றும் வாசனை (கந்தா) ஆகிய புலன் உணர்வுகளால் கிடைத்த வெளி உலக அனுபவத்தின் மூலம் இந்த மனதின் போக்குகள் பலப்படுத்தப்படுகின்றன.

ஒரு வகையில், காரண உடலே உங்களது உண்மையான இயல்பாகிறது. இது நிபந்தனைக்கு உட்படாத உங்களுடைய மனதின் இயற்கை நிலையாக உள்ளது. ஒரு துருப்பிடித்த இரும்பு எவ்வாறு குறைந்த மின்சாரக் கடத்தியாக உள்ளதோ அதே போல் நிபந்தனைக்கு உட்பட்ட ஆன்மா பேரின்பத்தின் குறைந்த கடத்தியாகும். மனதின் அனைத்து போக்குகளும் உங்களுடைய காரண உடலில் வாழ்கின்றன.

நோயின் சுழற்சி

பெரும்பாலான உடல் நோய்கள் காரணங்களாக இல்லாமல் அறிகுறிகளாக உள்ளன. அவைகள் இப்போதய மாசுபட்ட, நிபந்தனைக்கு உட்பட்ட உணர்வின் அறிகுறிகள் ஆகும். நுட்ப உடல் அழுத்தமடையும் போது நோயின் அறிகுறிகள் பௌதிக உடலில் வெளிப்படும். பௌதீக உடலின் சில நோய்களை வைத்தியம் மற்றும் சிகிச்சையால் தடுக்க முடியும். ஆனால் நுட்ப உடலில் இருந்து மூல காரணம் நீக்கப்படுவதால் மட்டுமே முழுமையாக குணம் அடைகிறது.

வயிற்றில் இருந்த ஒரு கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ள ஒரு புற்று நோயாளியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவரது கட்டியின் இயற்கை நிலை என்னவாக இருந்தாலும், அவர் தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் — அவரது பௌதீக உடல் நேரடியாக பாதிப்படையும் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் — அவரது நுட்ப உடலை அது நேரடியாகப் பாதித்து, அவருக்கு கட்டி திரும்பி வர வாய்ப்பு உள்ளது. அவர் தனது காரண உடலுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றால், தியானம் (தியானா) அல்லது ஆழமான பக்தியில் மூழ்குதல் (மஹாபாவா) மூலம் அவர் நோயைத் தனது அமைப்பிலிருந்து எப்போதைக்குமாக வெளியே தள்ள முடியும்.

சில நோய்கள் பௌதீக உடலில் தோன்றி நுட்ப உடல் (உணர்வு) மூலமாகப் பயணித்து காரண உடலைப் (ஆன்மா) பாதிக்கிறது. இத்தகைய நோய்கள் ஒருவரது உடல், மனம் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. காரண உடலில் தோற்றுவிக்கப்பட்ட நோயோடு ஒப்பிடும்போது இவைகளை எளிதாகவும், விரைவாகவும் சரி செய்யலாம். நேரடியாக மாசுபட்ட உணர்வால் வரும் நுட்ப உடலில் ஏற்படும் வியாதிகள் பௌதீக உடலில் நிரந்தர நோயாக வளருகிறது. உணர்ச்சிகளின் சமச்சீரின்மையால் ஏற்பட்ட நுட்ப உடலின் நோயானது அனைத்து நீண்டகால வியாதிகளுக்கும் முதன்மையான காரணமாகிறது. காரண உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட நோயானது குணமடைய நீண்ட நாட்களாகும். அவை பெரும்பாலும் பௌதீக உடலின் முடிவிற்குக் காரணமாகிறது.

வரையருக்கப்பட்ட ஆன்மாவின் நிலை உங்களது உணர்வில் ஒரு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக உங்களது பௌதீக உடல் பாதிப்படைகிறது. எவரெல்லாம் மனஅழுத்தமற்ற வாழ்க்கை வாழ்கிறார்களோ அவர்கள் ஆரோக்கியமான உடலுடன் ஒரு நீண்ட வாழ்க்கையை அனுபவிக்கும் மனோபாவத்துடன் இருக்கின்றனர். பௌதீக உடலின் இயக்கங்கள், உணர்வு நிலை மற்றும் ஆன்ம நிலையால் பாதிக்கப்படைகின்றன. உதாரணமாக, முழுவதுமாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ள ஒரு நோயாளி, அவரது உணர்வு (நுட்பமான உடல்) தாக்கத்தைப் பெற்றிருப்பதால் நகர முடியாது. இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொருவர் காரண உடல் (ஆன்மா) இல்லாமையால் தனது உணர்வு நிலை அல்லது உடல் இயக்கங்களை மீண்டும் பெற முடிவதில்லை.

மனஅழுத்தத்திற்கான காரணங்கள்

ஒரு ஏற்புடைய கேள்வி: மனஅழுத்தத்திற்குக் காரணம் என்ன? இது மனதின் ஒரு நிலை ஆகும். இது காரண உடலில் உருவாகிறது. மனம் அதனுடைய சொந்த, மறைக்கப்பட்ட சுபாவங்களினால் பாதிக்கப்பட்டதாக ஆகி விடுகிறது. உங்களது ஆசைகளை அடக்கி வைத்தல் அல்லது ஒரு நிறைவடையாத வாழ்க்கை ஆகிய இவை இரண்டும் வடிவமைக்கப்பட்ட மனதின் அறியாமையின் காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடும். அதிக அளவு மக்கள் ஒரு நிறைவடையாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; சிலர் ஆன்மாவின் குரலை புறக்கணித்து விடுகிறார்கள், மற்றவர்கள் பொருளைத் தேடுவதில் அதை மூழ்கடிக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் அது உங்களைப் பிடித்து விடும்.

காரண உடல் சரியில்லை என்றால் அதைக் குணப்படுத்த வெளிமருந்து எதுவும் இருக்க முடியாது. மனஅழுத்தத்திற்கான சிகிச்சை தருவதற்கு முன்னால், அது எந்த வகை மனஅழுத்தம் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியமாகும்.

கடுமையான மனஅழுத்தம்

மனஅழுத்தத்தால் உங்கள் உடல் இப்போது ஆரோக்கியமாக இல்லை என்றால், உங்களுக்கு மிக்க அழுத்தம் உருவாகி இருந்தால், உயர் ரத்த அழுத்தம், பசியின்மை அதாவது ஒழுங்கற்ற பசி அல்லது இதே போன்ற பிரச்சினைகள் இருந்தால் உங்கள் மனஅழுத்தம் ஏற்கனவே உங்கள் பௌதீக உடல் வரை பரவி விட்டது என்பதாகும். நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்படும் வாய்ப்பும் உள்ளது. மேற்கூறப்பட்ட உடல் அறிகுறிகளுடன், மிதமான மனஅழுத்தம் மற்றும் மாயையான மனஅழுத்தம் இவைகளுக்குக் கூறப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் இருந்தால் அது கடுமையான மனஅழுத்தம் என்று முத்திரை குத்தப்படும்.

உங்களின் இந்த நிலைக்குக் காரணம் உங்களின் இறுக்கமான வாழ்க்கை, உணர்ச்சிக் கொந்தளிப்பு மற்றும் நீண்ட காலமாக பட்டினியாகக் கிடந்த உங்கள் ஆன்மா எப்படியோ ஆன்மீகப்பஞ்சத்தில் சமாளித்து பிழைத்துள்ளது. இதற்கு அர்த்தம் உங்களின் மனஅழுத்தம் குணப்படுத்த முடியாதது என்பதில்லை; நீங்கள் மூன்று மட்டங்களிலும் வேலை செய்யத் தேவை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. நான் “சிகிச்சை” என்ற பிரிவின் கீழ் இதைப்பற்றி மேலும் விரிவாக விளக்குவேன்.

மிதமான மனஅழுத்தம்

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது ஆனால் நீங்கள் அனுபவித்த பெரும்பாலான விஷயங்களில் ஆசையை இழந்து விட்டீர்கள் மற்றும் நீங்கள் முடிவெடுக்க முடியாதவராகவும், கருத்தற்றவராகவும் இருப்பதாகத் தோன்றினால் உங்களின் மனஅழுத்தம் நுட்ப உடல் அளவு உயர்ந்துள்ளது என்றும் இன்னும் உங்களின் பௌதிக உடலை அது தொடவில்லை என்றும் பொருள். அது உணர்வுநிலையின் அளவிலேயே உள்ளது. ஒழுக்கம் மற்றும் முயற்சி மூலம் இதைக் குணப்படுத்த முடியும்.

மாயையான மனஅழுத்தம்

உங்கள் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள் பெரும் சலிப்பு, மந்தநிலை, மயக்க உணர்வு, தூக்கமின்மை, வெறுப்பு, பயம் மற்றும் அமைதியின்மை என்ற எல்லையில் இருந்தால் உங்கள் மனஅழுத்தம் ஆரம்ப நிலையில் இருப்பதாகும். நீங்கள் இன்னும் பச்சை மண்டலத்தில் தான் இருக்கிறீர்கள். ஒரு குறுகிய காலத்தில் நீங்கள் மீண்டும் உங்களின் இயல்பான மன ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

மனஅழுத்தத்திற்கான சிகிச்சை

சிகிச்சை பயன் தருவதற்கு, மேற்கூறப்பட்ட என் ஆய்வறிக்கையை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். மேலே கூறப்பட்டதைப் படித்த பிறகு, அதில் உங்களுக்கு உடன்பாடு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் தொடர்ந்து படியுங்கள்.

உங்களின் மனஅழுத்தம் ஒரே இரவின் செயல்களால் ஏற்பட்ட விளைவு அல்ல, எனவே ஒரே இரவில் இதை சரி செய்ய முடியாது என்பதை, சரியான சிகிச்சைக்குப் போகுமுன் நீங்கள் தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை விரைவில் சரிசெய்ய முடியவில்லையே என்று நீங்கள் விரக்தி அடையக் கூடாது. பொறுமையாக இருங்கள். முதலில் இத்தகைய மனஅழுத்தத்திற்கு எவ்வாறு சுலபமாகச் சென்றீர்களோ அவ்வாறே எளிதில் நிச்சயமாக அதைவிட்டு நீங்கள் வெளியே வர முடியும். அதனால் மிகவும் பொறுமையாகவும், தளர்வடையாமலும் இருங்கள். உங்களுடைய மனது சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் கையும் களவுமாக அதைப்பிடித்தால், அது நிறுத்தி விடும்.

நாம் சிகிச்சைக்குப் போகலாம்:
நீங்கள் தற்போது மனஅழுத்தத்திற்கான எதிர்ப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றால், பாதி வேலை ஏற்கனவே முடிந்தது. இது போன்ற மாத்திரைகளை உபயோகிக்கத் தொடங்க வேண்டாம். இந்த தூக்கத்தைத் தூண்டுகிற பொருட்கள் செயற்கையாக ஒரு அமைதியான மனம் போன்ற மாயையை உருவாக்கி உங்கள் மூளையை சாந்தப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, உங்களது மூளை அந்த மருந்திற்குப் பழகிப் போவதால் அதன் அளவையும் அதிகரிக்க வேண்டி உள்ளது.

மனஅழுத்தத்தை முற்றிலும் போக்குவதற்கு மட்டுமல்லாமல், எப்போதும் இருப்பதைவிட திடமுள்ளவராக உணர்வதற்கு, நீங்கள் இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்க வேண்டியது அவசியம்: உடல், உணர்வு மற்றும் ஆன்மா.

ஸ்தூல உடல் (பௌதீக)

உங்களுடைய பௌதீக உடலுக்கு உடலுறுதி மீண்டும் கிடைக்க பின்வரும் எல்லாவற்றையும் அல்லது சிலவற்றையாவது செய்யுங்கள்:

 1. உங்கள் உடலை சிறிது களைப்படையச் செய்யுங்கள். வெளியே சென்று உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சியோ அல்லது சில விளையாட்டுக்களையோ விளையாடுங்கள்.
 2. இயற்கையில் காரத்தன்மையுள்ள (அல்கலைன்) சைவ உணவுகளைச் சாப்பிடுங்கள். அமில (அசிடிக்) உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் முழு விகிதச் சாப்பாட்டை அதிகம் உட்கொள்ளவும். மாவுச்சத்துள்ள (ச்டர்ச்சி) உணவுகளையும், மசாலாவையும் தவிர்க்கவும்.
 3. ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக ஒரே நேரத்தில் சாப்பிடவும். உங்களின் அடுத்தடுத்த உணவுகளுக்கு இடையே அதிக நேர இடைவெளி கொடுக்க வேண்டாம். அது உடலின் சேமிப்பில் உள்ள ஆற்றலை பயன்படுத்தத் தூண்டுவதால் இன்சுலின் அளவை உயர்த்துகிறது.
 4. ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் தூங்கப் போக வேண்டும். தூங்க முடியவில்லையே என்பது பற்றி கவலைப்பட வேண்டாம். ஒழுக்கத்தின் நிமித்தம் இந்த விஷயத்தைக் கடைபிடிக்கவும்.
 5. தினமும் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள்.
 6. டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அது உண்மையில் உடலையும், மனத்தையும் மந்தமாக்குகிறது.

நுட்ப உடல் (உணர்வு)

உங்களது நுட்ப உடலையும், அதன்மூலம் உங்களது ஆரோக்கியமான உணர்ச்சிகளையும் சுத்திகரிக்க பின்வருமாறு செய்ய வேண்டும்:

 1. சில தன்னலமற்ற சேவைகளைச் செய்வதிலோ அல்லது உணர்வுபூர்வமான நிறைவைக் கொடுக்கும் சமூக அல்லது ஆன்மீகப் பாதையிலோ ஈடுபடுங்கள்.
 2. உங்களை எது சந்தோஷப் படுத்துகிறதோ அதைச் செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் வெளியில் செல்வது, ஓவியம், சமையல், வாசித்தல் எதுவாக இருந்தாலும் செய்யுங்கள். மனஅழுத்தத்தைப் பற்றியும், மற்றவர்களின் கதைகளையும் படிக்க வேண்டாம்.
 3. உணர்வுபூர்வமாக உங்களது ஆற்றலைக் குறைக்கும் எவரிடமும் பேச வேண்டாம். தொலைபேசி அழைப்புகளையும், பிரயோஜனமற்ற உரையாடல்களையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
 4. நீங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதாக எவருக்கும் சொல்ல வேண்டாம். பெரும்பாலான மக்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை என்றும், நீங்கள் மனச்சோர்வடைந்து இருக்கிறீர்கள் என்றும் சொல்வார்கள். மற்றவர்கள் இதற்காக ஒன்றும் செய்ய முடியாது.
 5. மருத்துவர்கள் கூட நீங்கள் சிலமுறைகள் சென்று சிகிச்சை பெற்ற பின்னும், மனஅழுத்தம் பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தால், அவர்கள் அது உங்களுக்கு இருப்பதாகச் சொல்லி, சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும்படி சொல்வார்கள். மனஅழுத்தமானது ஒரு தந்திர நிலை, மிகவும் லாபகரமானது, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது என்றும் நான் கூறுவேன்.

மனஅழுத்தமானது, எதிர் கொண்டு அழிக்க வேண்டிய ஒருவகையான பயம் இல்லை. அது சாதாரணமான ஒரு மனநிலை, என்றாலும் விரும்பத்தகாத ஒன்றாகும். நீங்கள் ஐஸ்கிரீமைப்பற்றி நினைக்கலாம், ஆனால் அது உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். அதேபோல் மனஅழுத்தத்தையும் நீங்கள் கைவிட்டுவிடத் தேர்வு செய்ய முடியும். உண்மையில் மனஅழுத்தம் உள்ளது என்ற எண்ணத்தை நீங்கள் ஊக்குவிக்கும் வரை உங்களுக்கு மனஅழுத்தம் உள்ளது என்று அறிவது அல்லது உணர்வது சாத்தியமற்றது.

சூட்சம உடல் (ஆத்மா)

ஒவ்வொரு நாளும் உங்கள் நேரத்தில் குறைந்தது முப்பது நிமிடங்களாவது பின்வருமாறு செய்து உங்களது மனஅழுத்தம் சீக்கிரமே அதிசயமாக மறைந்து போவதைக் காணுங்கள்:

 1. காலையில் பதினைந்து நிமிடங்களும், படுக்கைக்கு செல்லுமுன் பதினைந்து நிமிடங்களும் தியானம் செய்யுங்கள். தொடர்ந்து நீண்ட நேரம் செய்வது மிகவும் நல்லது. நீங்கள் தியானம் செய்யுமுன் ஒருமித்த கவனத்தை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்கு உங்களிடமிருந்து இரண்டு அடி தூரத்தில் உங்களின் கண்மட்டத்தில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி கண் இமைக்காமல் பாருங்கள். கண் இமைக்காமல் இருப்பது கடினமே ஆகையால் வசதிக்கு ஏற்ப முடிந்த அளவு நேரம் இவ்வாறு செய்ய வேண்டும். கண்களை இமைக்காமல் இருக்கும் _த்ராடகா_ என்ற கவனத்திற்கான நடைமுறைப் பயிற்சியிலிருந்து, இது கொஞ்சம் மாறுபட்டதாகும்.
 2. உலக எண்ணங்களிலிருந்து உங்கள் மனதைத் திருப்ப சில பக்திப் பாடல்கள் அல்லது இனிமையான இசையைக் கேளுங்கள்.
 3. முடிந்த வரை உங்களது வலது பக்கமாக படுத்துத் தூங்குங்கள். இது சந்திரக் கலையைத் தூண்டுகிறது (இடா நாடி), இடது மூச்சை செயல்படுத்தி உடல் வெப்பநிலை குறைய உதவுகிறது. தியானத்தின் நடைமுறைகள் குளிர்ந்த இடங்களில் ஏன் வளமை பெறுகின்றது என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. குளிரில் இருக்கும் போதும், இடது நாசியின் மூலம் சுவாசிக்கும் போதும் மனதின் பாரபட்சமாக சிந்திக்கும் துறைகள் அமைதி அடைகின்றன.
 4. ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் தெய்வத்தின் கரங்களில் இருக்கும் ஒரு கருவி என்பதையும், அவர் உங்களைப் பார்த்துக் கொள்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எவர் ஒருவர் அவரது சரணாலயத்தை (சரணாகதி) அடைய முற்படுகிறாரோ, அவர் இறைவனது அருளில் நிபந்தனையின்றி திளைக்கிறார். இதில் எந்த சந்தேகத்தையும் தேக்கிவைத்துக் கொள்ளாதீர்கள்.
 5. புன்னகையுடன் இருங்கள். முயற்சி செய்யுங்கள். அந்தப் புன்னகையை உங்கள் முகத்திலிருந்து நீங்க விட்டு விட வேண்டாம்.

தியானப் பயிற்சியானது ஐந்து ஆற்றலையும் நிலைப்படுத்தி, ஐந்து உறைகளையும் துளைத்துச் செல்கிறது.

சுருங்கக் கூறினால் மூன்று உடல்கள், ஐந்து உறைகள் மற்றும் ஐந்து ஆற்றல்களைத் தவிர வேறு ஒன்றும் உங்களிடம் இல்லை. நீங்கள் உடல், உணர்வு மற்றும் ஆன்மா என்ற இந்த மூன்று அம்சங்களிலும் வேலை செய்தால் இருபத்திஎட்டு நாட்களில் வியக்கத்தக்க பலனைக் காண்பீர்கள்.

தொடர்ந்து நாற்பது நாட்கள் இதைச் செய்வது ஆற்றலை உறுதிப்படுத்தும். பெரும்பாலான யோகப் பயிற்சிகள் தங்களின் முழு பலனைக் காட்ட ஆறு மாதங்களாவது ஆகும். ஆகையால் முழு ஆறு மாதங்களுக்கு இதைச் செய்தால் உங்களது உணர்வுநிலையிலும், சக்கரங்களின் சுழற்சியிலும் ஏற்படும் மாற்றங்களால் நீங்கள் மனஅழுத்தத்திலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும். நீங்கள் முற்றிலும் குணமடைவீர்கள். ஆறே மாதங்கள். மருந்தே இல்லாமல்.

ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறுவதைப்போல் கலை என்பது நீளமானதும், நேரம் என்பது விரைந்து செல்லக்கூடியதும் ஆகும். இதைப் பற்றி இன்னும் அதிகமாக நான் எழுதவும், பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன். இந்தப் பதிப்பு ஏற்கனவே வெறுக்கத் தக்க ஆளவு நீண்டதாக ஆகிவிட்டது. உங்களது முயற்சியாலும், இந்த அணுகுமுறையைப் பின்பற்றியும் நீங்கள் நன்றாக ஆகமுடியும் என்று நான் நம்புகிறேன்.

எல்லா புலனறிவாற்றல் உள்ள உயிர்களும் பேரானந்தத்தை அனுபவிக்கட்டும் மற்றும் நோயற்ற, வறுமையற்ற, பட்டினியில்லாத வாழ்க்கையை வாழட்டும்.

அமைதி.
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – Depression: The Yogic View.