எப்படி தண்ணீரிலிருந்து ஈரப்பதத்தைப் பிரிக்க முடியாதோ, ஒளியிலிருந்து வெப்பத்தைப் பிரிக்க முடியாதோ, அதே போல் மனதிலிருந்து ஆசையைப் பிரிக்க முடியாது. கைவிடப்படாத எண்ணங்களே ஆசைகள் ஆகும். எண்ணங்கள் ஒரு சாதாரண நினைப்பே ஆகும். அவற்றில் நல்லவை அல்லது கெட்டவை, உயர்ந்தது அல்லது அபத்தமானது, சரியானது அல்லது தவறானது என்று எதுவும் இல்லை. இது போன்ற அடையாளங்கள் நிபந்தனையின் அடிப்படையில் உங்களால் கொடுக்கப்பட்ட பட்டங்களாகும்.

உள்ளார்ந்து பார்த்தால் எண்ணங்கள் யாவும் ஒரே மாதிரியானவை தான். உண்மையில், எண்ணத்தை விட அந்த எண்ணத்தைக் கொண்டு என்ன செய்தாய் என்பதே முக்கியமானதாகும். ஒரு எண்ணம் உதித்ததும் அதில் ஏற்படும் ஈடுபாடு ஆசையாகவோ, நேர்மறை அல்லது எதிர்மறை உணர்ச்சியாகவோ வடிவம் எடுக்கும்.

அனைத்து கர்மாவும் எண்ணங்களிலிருந்து உருவாகின்றன. அலைமோதும் சிந்தனையானது அமைதியான நிலையில் உள்ள உங்கள் மனத்தை, குளத்தில் ஏற்படும் சிற்றலையைப் போல் நிலையற்றதாக்குகிறது. தூய்மைப்படுத்தப்பட்ட அமைதியான மனம் பூர்த்தியான அல்லது கைவிடப்பட்ட ஆசைகளால் பாதிக்கப்படாமல் இருக்கிறது; இரண்டு விதமான விளைவுகளும் எப்படியும் மனதால் தான் உணரப்படும். எனவே, உங்களுக்கு உணர்வுகளின் நிறைவு வேண்டுமா அல்லது நிறைவான அங்கீகாரம் வேண்டுமா, திருப்தியான அன்பு வேண்டுமா அல்லது ஒரு எளியப் லட்டு வேண்டுமா? அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

கர்மாவின் சட்டங்களைத் தள்ளுபடி செய்ய முடியாததால், நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களின் சொந்த ஆசைகளின் தயாரிப்பே ஆகிறீர்கள். உங்களின் ஆசைகள் நடவடிக்கை எடுக்கவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பாதையை அமைக்கவோ தூண்டுகின்றன. நீங்கள் உங்கள் ஆசைகளின் தன்மையைத் தெரிந்து கொள்ளும் முன்னர், உங்கள் மனதின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஆசை நிறைவேறும் போது அது தற்காலிக சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதன் விளைவானது ஆசையைப் போலவே சூட்சமமானதும், நழுவித் தப்பித்துக் கொள்வதாகவும் உள்ளது. ஆசைகளை, ஆயுளுக்கும் திருப்தி அடையச் செய்ய முடியும் என்றால் உண்மையான பூர்த்தியைப் பெற விரும்புவது மோசமானதாக இருக்க முடியாது. எனினும் பூர்த்தி அடையும் போது மேலும் எண்ணற்றவை ஊற்றெடுக்கின்றன. ஆசைகளின் தன்மையை ஒருமுறை புரிந்து கொண்டால் அவை உங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதை நிறுத்தி விடும். நீங்கள் இப்போது அமைதியான மனநிலையைப் பிடித்துக்கொண்டு இருப்பதால் உங்கள் எண்ணங்கள் தோன்றும் போதே உடனடியாக மறைந்துவிடும். உண்மையில் ஆசைகளை வகைப்படுத்த முடியாது, எனினும் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு உதவியாக நான் அவற்றை வகைப்படுத்தி உள்ளேன். இங்கே:

உடல்சார்ந்த ஆசைகள்

அனைத்து விதமான புலன்களின் நிறைவுகளும் முற்றிலும் உடல் சார்ந்த ஆசைகளே ஆகும். இந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து ஒரு இனிமையான விளைவை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இத்தகைய எதிர்பார்க்கப்பட்ட இன்பம், உங்களின் ஆசைகள் திருப்தியடையக் கூடிய சிந்தனையைப் பிடித்து வைத்துக் கொள்ளத் தூண்டுகிறது. இதன் விளைவாக உங்களின் செயல்கள், உணர்ச்சிகள் மற்றும் விவேகம் ஆகியவை அந்த நிறைவினை அடைய ஒன்றாக வேலை செய்கின்றன. இந்த ஆசைகள் பேராசையான செயல்பாட்டுடனோ அல்லது சக்தியை வெளியே காட்டாமல் நிரந்தரமாக உங்களுக்குள்ளோ, சில நேரங்களில் இரண்டிலுமோ இருக்க முடியும்.

நீங்கள் உடல் மூலம் அனுபவிப்பவையாவும் அடிப்படையில் புலன்களின் நிறைவுகள் தான். பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இதைத் திருப்தி செய்வதிலேயே செலவிடுகிறார்கள். இவர்கள் உடல் மூலமாக எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். வாழ்வதும், இறப்பதும் அந்த உடலுக்காகவே செய்கிறார்கள். அவர்கள் உடலுக்கு உண்மையாக, அடிமையாக, கேள்வி கேட்காத ஊழியனாக இருந்து விடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை உணவு, உடை, புணர்ச்சி, ஆறுதல், பாதுகாப்பு மற்றும் உடலின் தேவைகளையே சுற்றி வருகிறது. உடல் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாவது அடிப்படையில் உடல் நலத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. எனினும் மனித உடல் தொடர்ந்து சிதைவடைகிறது. பலர் இடைவிடாமல் அதைப் பராமரிக்க கடுமையாக உழைக்கிறார்கள். அந்த உழைப்பு வீணான ஒன்றேயாகும்.

உணர்வுசார் ஆசைகள்

அன்பு, திரும்பப்பெறுதல், அங்கீகாரம், பகிர்ந்து கொள்ளல் ஆகிய தேவைகள் இந்த வகையின் கீழ் அடங்கும். இவையாவும் அறியாமை மனதின் விளைவேயாகும். தற்போதைய வாழ்வின் மற்றும் முந்தைய பிறவிகளின் மீதமுள்ள கர்ம வினைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட மனதிலிருந்து வெளிப்படுபவையாகும். இந்த ஆசைகள் நிறைவேற, உங்களைத் தூண்டி வெளியே தேட வைக்கின்றன. பகிர்ந்து கொள்ளவும், தோழமைக்கும் ”யாரோ ஒருவர்” உங்களுக்குத் தேவைப் படுகிறார். இப்பொழுது மனதிருப்திக்கு நீங்கள் வெளியே தேடுவதால் பிரபஞ்சத்தின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு தாகத்துடன் வெளியே புறப்பட்டுள்ளீர்கள். கடைசி மூச்சு வரை இதன் கைப்பாவையாக தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

உடல் பலவீனமாகி வயதாகும் போது உடல் சார்ந்த ஆசைகள் குறையலாம் ஆனால் உணர்வுசார் ஆசைகள் உயிரோட்டத்துடன் நம்மை உந்திக் கொண்டே இருக்கும். உங்களின் உண்மையான இயல்பை நீங்கள் மறக்கும் போதும், நீங்கள் சார்ந்திருக்கும் போதும் (இதைப்பற்றி மேலும் அறிய ‘எனது உண்மை’ என்ற வலைப்பதிவைப் பாருங்கள்) இந்த ஆசைகள் எழுகின்றன. “உணர்ச்சியின் தேவைகள்” என்ற பதம் ஒரு தவறான சொல்வழக்கு ஆகும். இது உணர்ச்சிகளால் வரையறுக்கப்பட்ட மனத்தின் ஒரு விளைவே ஆகும். மனதிற்கென்று இதுபோன்ற எந்தத் தேவையும் கிடையாது. மிருகங்களை வெட்டும் இடத்தைப் பார்த்தால் எதிர்மறை உணர்வு தூண்டப்படலாம் ஆனால் அதுவே வணிக உரிமையாளருக்கு நேர்மறை உணர்வாகவும், இயந்திரத்தை இயக்குபவருக்கு நடுநிலையாகவும் இருக்கலாம். அனைத்தும் நீங்கள் எப்படி வரையறுக்கப்பட்டு இருக்கிறீர்களோ அதைச் சார்ந்துள்ளது. உங்களின் உண்மையான இயல்பு கண்டுபிடிக்கப்படும்போது உணர்ச்சிசார் ஆசைகள் சர்வசாதாரணமாக மறைந்துவிடும்.

அறிவுசார் ஆசைகள்

ஒரு வரையறுக்கப்பட்ட மனத்தின் கவனம் வெளிப்புறம் திரும்பி இருக்கும் போது உடல் மற்றும் உணர்ச்சிகளின் ஆசைகள் தற்காலிகமாக திருப்தி அடைந்திருந்தாலும், அறிவார்ந்த ஆசைக்கு வழி வகுக்கிறது. இது தனிப்பட்ட ஒருவரை ஏதாவது ஒன்றை புதியதாக உருவாக்கவோ அல்லது வெளித்தோற்றத்தில் தன்னலமற்றதாகக் காணும் சமூகக் காரியங்களில் ஈடுபடவோ வைக்கும். முதல் இரண்டு ஆசைகளை விட இந்த ஆசை நிறைவேறினால் அதிக காலத்திற்கு அந்தத் திருப்தி நீடிக்கிறது.

வேறு அனைத்து விஷயங்களும் நன்றாகப் போகிறபோது, புலன்களின் நிறைவுகள் மற்றும் உணர்வுகளின் மனநிறைவு போதுமான அளவு இல்லை என்று உணரும் போது இது துளிர் விடுகிறது. அதன் இயல்பால் ஒரு குறிப்பிட்ட அளவு உள்நோக்கும் சக்தி கிடைக்கிறது. எனினும் ஒரு தற்பெருமையான, அமைதியற்ற மற்றும் அறியாமையுடனான மனம் உங்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கும். நீங்கள் உங்களின் கணிசமான நேரம் மற்றும் ஆற்றலை இதன் மீது செலவிட்டுக் கொண்டிருக்கலாம்.

இருந்தாலும் இன்னும் முதல் இரண்டு ஆசைகளும் கூட உங்களை விட்டு அகன்றிருக்காது. ஏனென்றால், பெரும்பாலும் நீங்கள் அதைப் பூர்த்தி செய்வதை விடுத்து உங்கள் மனதை வேறு எதிலாவது ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எனினும், பெரும்பாலும் இந்த ஆசைகள் சமூகத்திற்கு மதிப்புமிக்க எதையாவது உருவாக்குகிறது. ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், ஒரு பொருள் அல்லது ஆன்மீகத் தேடலை நோக்கி வேலை செய்தல், ஒரு சமூகம் அல்லது சமயத்திற்காக அர்ப்பணித்தல் போன்றவை அறிவுசார்ந்த ஆசையின் உதாரணங்கள் ஆகும். முதல் இரண்டையும் விட மேலாக இது நீங்கள் உள் நோக்கித் திரும்ப உதவுகிறது. பெரிய சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அறிவுசார்ந்த ஆசைகளின் விளைவுகளாவர்.

ஆழ்நிலை ஆசை

மற்ற மூன்றும் போல் அல்லாமல் இது எப்போதும் தனியாகவே இருக்கும். உங்களின் உண்மையான இயல்பைக் கண்டறியும் ஆசைக்கனல் மட்டுமே கொழுந்துவிட்டு எரியும் போது பாதி வேலை முடிந்தது போலாகும். கணக்கிலடங்காத திருப்திப்படுத்த முடியாத முதல் மூன்று வகையான ஆசைகளைத் திருப்திப் படுத்துதல் பயனற்றது என்று நீங்கள் உணர்ந்து கொண்டதே உங்களின் இந்த ஆசைக்கான காரணமாக இருக்கலாம்.

ஆழ்நிலை ஆசை பூர்த்தியடையும் போது அது உங்களை அனைத்து வரையறுக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் அகற்றி அறியாமைத் தளையில் இருந்து விடுவிக்கிறது. இந்த ஆசையே உங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் இறுதித் தேடலாகும். நீங்களும் கிருஷ்ணா, கிறிஸ்து, புத்தர், மகாவீரர், பெரிய போதனையாளர்கள், தீர்க்கதரிசிகள் அல்லது உலகம் கண்டிராத சிந்தனையாளர்களைப் போல் ஆகலாம். இதற்குமேல் அதிகம் சொல்லத் தேவையில்லை.

உங்களின் தவறான அகங்காரமானது உடல் சார்ந்த ஆசைகள் என்ற கோட்டையைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய ஆசைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் மேலும் அகங்காரம் கூட்டப்படுகிறது. உங்களின் உணர்ச்சிப் பூர்வமான ஆசைகள் உங்களின் அகங்காரத்திற்கு எரியூட்டுகின்றன மற்றும் அறிவுசார்ந்த ஆசைகள் அதை திருப்திப் படுத்துகின்றன. அகங்காரம், ஒரு ஆழமான விஷயம். மற்றொரு முறை இதைத் தலைப்பாக வைத்து வரும் காலத்தில் எழுதுகிறேன்.

இப்போதைக்கு, உங்களின் தவறான அகங்காரமானது காலங்காலமாக இந்த உலகத்தின் அனுபவங்களால் வெளிப்புற மற்றும் உண்மையான அறிய நிகழ்வுகளால் ஏற்பட்ட உங்களது கர்மாவின் பதிவுகளே என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வெங்காயத்தின் அடுக்குகளை உரித்து எடுத்தால் இறுதியில் ஒன்றுமிருக்காது. அதேபோல் உங்களைத் தூய்மை படுத்திக் கொள்ளும்பொழுது உங்களுக்குள் அகங்காரத்தின் சுவடே இருக்காது. ஏனெனில் அகங்காரம் என்பது அழுக்கு மற்றும் அறியாமை ஆகும். அதுவே அருவ ஆனால் வலிமையான மூலகமான, அகங்காரமாக உருவாகிறது.

பூர்த்தி அடையாத உடல், உணர்வு, அறிவுசார்ந்த ஆசைகள் உங்களின் அகங்காரத்தை முறையே சிதறடிக்கவோ, புண்படுத்தவோ, மாற்றவோ செய்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆழ்நிலை ஆசையானது உங்களுக்குள் சாந்தத்தைத் தூண்டி உங்களின் உண்மையான இயல்பைக் கண்டுபிடிப்பதை நோக்கி கடினமாக வேலை செய்ய உந்தித் தள்ளும். அந்தக் கண்டுபிடிப்பானது உங்களின் அகங்காரத்தை முற்றிலும் கரைத்து விடும். முதல் இரண்டு வகையான ஆசைகளும் வெளியே மகிழ்ச்சியை நாடச் செய்கின்றன. நிரந்தரமான பேரின்பத்தை வெளியிலிருந்து பெற முடியாது. எனவே, அவற்றிடம் இருந்து தொடர்ந்து சந்தோஷத்தை அனுபவிக்க நீங்கள் உண்மையாகவும் விறுவிறுப்பாகவும் முயற்சி செய்த போதிலும், உங்களை அறியாமல் நீங்கள் தொடர்ந்து அந்த ஆசைகளுக்கு உணவளித்துக் கொண்டே எப்பொழுதும் இன்னும் ஆசைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள்.

உங்களின் அமைதியான, சாந்தமான சரீரம் ஆகிய வஸ்திரம் அறிவுசார்ந்த உண்மை மற்றும் கருத்தாக்கத்துடனான அறிவு ஆகியவற்றால் நெய்யப்படுமானால் அது அறிவிப்பே இல்லாமல் மறைந்திருக்கும் ஆசைகள் வெடிக்கின்ற சமயத்தில் அல்லது ஒரு நெருக்கடியான நேரத்தில் தானே ஒரு கணத்தில் முறுக்கு அவிழ்ந்து விடும். நீங்கள் அதன் தன்மையைப் புரிந்து கொண்டால் தான் அதை வழிக்குக் கொண்டு வர முடியும். ஆசைகளை முதலில் புரிந்து கொண்டு பின்னர் அடக்க வேண்டும். அதன் பின்னர் ஆதிக்கம் செலுத்தி அதை வெளியேற்றும் முன் முழுவதுமாக ஆட்கொள்ள வேண்டும்.

ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த தியானம் உங்கள் மனத்தையும் அதே போல் ஆசைகளையும் நிர்மலமாக்கும். ஆராய்ச்சி சிந்தனை மிக்க தியானம் அல்லது தூய பக்தி அவற்றை முற்றிலும் அழித்துவிடும். இறுதியாக ஒவ்வொரு முறை ஆசை எழுகின்ற போதும் மனதை அதிலிருந்து அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். பழகப் பழக உங்களின் ஆசைகளை உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லாத வெறும் எண்ணமாக மட்டுமே பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

எண்ணங்கள் தோன்றும்போதே கண்டறிய எப்போதும் நிகழ் காலத்திலும், எச்சரிக்கையுடனும் இருக்கும் மனம் தேவைப்படுகிறது – உங்கள் பையில் ஒரே ஒரு காசுடன் நடந்து சென்றால் கூட எச்சரிக்கை ஒலி எழுப்பும் விமான நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பைப் போன்று இருக்க வேண்டும். உடல் சம்பந்தமான ஆசைகளில் இருந்து விடுபடுவதற்கு ஆழ்ந்த சிந்தனை மற்றும் கைவிடுதல் ஆகியவை தேவைப்படுகின்றன. உணர்ச்சி சம்பந்தமான ஆசைகளை ஒழிப்பதற்குப் பிரதிபலிப்பு மற்றும் சாந்தம் தேவைப்படுகிறது.

அறிவுசார்ந்த ஆசைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள விவேகம் மற்றும் உள்நோக்கிய ஞானம் தேவைப்படுகிறது. ஆழ்நிலை ஆசை பூர்த்தி அடைய மேலே கூறிய அனைத்து வழிகளையும் தீவிரமாகப் பின்பற்றுவதுடன் நீங்கள் ஒரு பக்தராக இருந்தால் முழுமையான சரணாகதியும், நீங்கள் ஒரு யோகியாக இருந்தால் பின்வாங்காத தியானப் பயிற்சியும் தேவைப்படுகிறது.

ஆசைகள் அடித்துக் கொண்டு வரும் போது அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை. அது இயற்கை தான். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சண்டை இல்லாமல் போரில் வெற்றி பெறுவதும், ஒன்றும் செய்யாமலேயே சமரசம் அடைவதும் தான். உங்களின் உண்மை இயல்பை உணரும் போது உங்களின் தேவைகள் அல்லது ஆசைகள் பற்றிய எந்தப் பிரமையும் உங்களுக்கு இருக்காது.

ஆசைகள், மனம் என்னும் மரத்தின் கவர்ச்சிகரமான பழங்கள் ஆகும். எத்தனைப் பழங்களைத் தான் உங்களால் பறிக்க முடியும்; ஆசையின் அடித்தளமாகிய வேர்ப் பகுதிக்கே நீங்கள் போக வேண்டும். ஆசை மரத்தின் வேர்ப் பகுதியே மனம் என்று பொருத்தமாக அழைக்கப்படுகிறது. ஒரு அறியாமையுடனான மனம் மற்றும் வரையறுக்கப்பட்ட தனித்தன்மை ஆகிய இவற்றுடைய எதிர்பார்ப்புகளே முறைதவறிப் பிறந்த குழந்தைகள் ஆகும் — ஆசைகள் அவற்றின் உடன்பிறப்புகள் ஆகும். ஒரு முறை ஆசையைத் திருமணம் செய்து கொண்டால் மிக நீண்ட நாட்களுக்கு குழந்தைக்குத் தரும் ஆதரவுத் தொகையைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இதே போல் இனி மற்ற ஆசைகளுடன் வரும் தொடர்புகள் மற்றும் அதன் மூலம் வரும் “எதிர்பார்ப்புகள்” இதற்கான கணக்கை நீங்களே செய்து கொள்ளுங்கள். இதனால் தான் விசுவாசமாக இருப்பது பலனைத் தரும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அமைதி.
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – The Desire Tree.