ஒவ்வொருவரும் ஒரு கண்ணுக்குத் தெரியாத சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அது கண்ணுக்குத் தெரியாததால் அப்படிப்பட்ட சுமையைப் பற்றியும், அது தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கிறது என்பது பற்றியும், எதுவும் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறீர்கள். உங்களால் நினைவில் கொண்டுவரக்கூடிய தருணத்திலிருந்து, தற்போதைய நிலைவரை அது உங்களுடைய உணர்வில் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், ஒரு குடிமகன் தான் வசிக்கும் நாட்டின் சட்டங்களை ஏற்றுக் கொள்வதைப் போல், நீங்கள் இதை முறையாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு தெளிவான, அமைதியான மற்றும் நிபந்தனையற்ற ஏற்றுக் கொள்ளலாகும். நீங்கள் ஏற்கனவே யூகிக்கவில்லை என்றால், ‘எதிர்பார்ப்புகள்’ என்ற பெரிய சுமையைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.
நீங்கள், உங்களுக்கு சில அடிப்படை மற்றும் யதார்த்தமான எதிர்பார்ப்புகள் அல்லது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை என்று நம்பிக் கொண்டிருக்கலாம். பின்வரும் பகுதியைப் படித்த பின்னர் திரும்பவும் யோசியுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன்.
எதிர்பார்ப்புகள் என்பது, பூர்த்தியடைவதைப் பார்க்க உங்களுக்கு உரிமை உள்ளதாக நீங்கள் நம்பும் ஆசைகளே ஆகும். எண்ணற்ற காரணிகள் மூலம், உங்களின் சொந்த வடிவமைக்கப்பட்ட காரணங்களால் நீங்கள் எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறீர்கள். இவையே உங்களது எல்லாத் துக்கம் மற்றும் மனஅழுத்தத்திற்கான முதன்மையான காரணமாகும். உங்களால் கைவிடப்படாத அந்த நீடித்த எண்ணங்களே ஆசைகள் ஆகும். உங்களால் விரும்பப்பட்டு மற்றும் பின்பற்றப்பட்ட அந்த எண்ணங்களே உங்களது உலகத்தின் கட்டிடக் கற்கள் ஆகும்.
பற்றுதல்களால் உறுதிப்படுத்தப்பட்ட, உங்களைச் சுற்றி ஆசைகள் என்னும் சுவர்களைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே, தப்பித்துக்கொள்ளக் கதவுகளே இல்லாமல் முற்றிலுமாக மாட்டிக்கொண்டு விட்டதை இறுதியாக நீங்களே கண்டறிவீர்கள். இது ஆழ்ந்த பொருள் பொதிந்த விஷயமாகும். நான் இன்னொரு முறை இதைப்பற்றி விரிவாக எழுதுவேன்.
இப்போது எதிர்பார்ப்புகள் என்ற தற்போதைய தலைப்பில் கவனத்தை செலுத்துகிறேன். எண்ணங்களால் உருவாகி, ஆசைகளால் தக்கவைக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்புகள் உங்கள் உலகத்தை அழிக்கின்றன. இந்த எண்ணங்கள் பொதுவாக ஒரு அமைதியற்ற மற்றும் அறியாமையில் உள்ள மனதின் விளைவுகள் ஆகும். எதிர்பார்ப்புகளை மூன்று வகைகளாக நான் பார்க்கிறேன். பின்வருமாறு:
சுய எதிர்பார்ப்புகள்
உங்கள் கல்வி, சம்ஸ்காரா, வளர்ப்பு, உங்கள் சமூக வட்டம் மற்றும் உங்கள் வாழ்க்கைத் தொழில் இவற்றின் அடிப்படையில் — உங்கள் சீரமைப்பில் இவை அனைத்தும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன — மற்றவர்கள் முன் ஒரு குறிப்பிட்ட முறையில் இருக்க வேண்டும் என்று உங்களை நீங்களே எதிர்பார்க்கிறீர்கள். பல வடிவங்களில் உங்களால் பெறப்பட்ட தகவல்களின் மூலம், சாதாரணமாக நீங்கள் பின்பற்றும் மதம், நீங்கள் கூடுதலாகத் தொடர்பு வைத்துக் கொண்டுள்ள மற்ற சமூக மற்றும் தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் — நீங்கள் சில வரையறைகளையும், தரத்தையும் உங்களுக்கு நீங்களே அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்களே எதிர்பார்க்கும் இந்த எதிர்பார்ப்புக்களை அடைய முடியாவிட்டால் அவை வெட்கம் மற்றும் குற்ற உணர்வை உருவாக்குகின்றன. நீங்கள் குறைந்த உற்சாகத்தையும், வேதனையையும் உணர்கிறீர்கள்.
அவநம்பிக்கை உள்ள அதே அளவுக்கு மறுப்பைக் கொண்ட நிலையில் பரிதாபகரமாகவும், உங்களை இழந்தும் நீங்கள் உணர்கிறீர்கள். இந்த பெரும்பாலான, கெட்டுப்போன குப்பைகளைக் கொண்ட பெருஞ்சுமையான, எதிர்பார்ப்புகளின் கீழ் நீங்கள் நிரந்தரமாகப் புதைந்து கிடக்கிறீர்கள். அவைகள் அழுகிய குப்பைகள்; வேறு எதுவுமில்லை. அவற்றை வடிகட்டுங்கள். உங்கள் உணர்வுகளை வலுப்படுத்தும் மற்றும் உங்களை இன்னும் அதிக கருணையுடைய நபராக ஆக்கும் எதிர்பார்ப்புகளை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களால் எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கு மாறாக, நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதில் உங்களுடைய முழு கவனத்தையும் செலுத்துங்கள். நீங்கள் ஒரு உட்புறமான பார்வையைப் பெறக்கூடும்.
மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பவை
இவை தான், நீங்கள் நியாயப்படுத்தும் மற்றும் உங்களுக்கு உரிமையாகக் கிடைக்க வேண்டியதாகத் தவறான நம்பிக்கை கொள்ளும் எதிர்பார்ப்புகள் ஆகும். அது பிரதி உபகாரம், அன்பு, பொருட்கள், வார்த்தைகள், சைகைகள் எதுவாக இருந்தாலும் சரி. நீங்கள் புரிந்து கொண்ட மற்றும் கிரகித்துக் கொண்டவை, உங்களுக்குச் சொல்லப்பட்ட மற்றும் கற்பிக்கப்பட்டவை இவற்றின் அடிப்படையில் நீங்கள் செய்ததாக உணரும் அனைத்திலும் அடிக்கடி உங்களுக்குச் சாதகமான ஒரு குறிப்பிட்ட பலனை அடையும் ஆசை உள்ளது. நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது நியாயமானது, முறையானது மற்றும் இயற்கையானது தான் என்று நீங்கள் நினைப்பதால், நீங்கள் இதை எதிர்பார்ப்புகளின் சுமையில் சேர்த்துக் கொள்கிறீர்கள்.
இவற்றினால் உங்களது சொந்த எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே, சில நேரங்களில் நீங்கள் யாரிடமிருந்து எதிர்பார்க்கிறீர்களோ அவர்கள் மீதும் அழுத்தத்தைக் கொடுக்க முடியும். இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, உங்களது எதிர்பார்ப்புகளின் அளவுக்குத் தகுந்தபடி உங்களுக்கு வருத்தத்தையோ, ஏமாற்றத்தையோ கொடுக்கிறது. நீங்கள் அக்கறை செலுத்தும் நபர்கள் மற்றும் நீங்கள் அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள். செய்து முடித்தபின் அவர்களும் நீங்கள் எதிர்பார்த்த அதே அளவு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களது எதிர்பார்ப்புகளைக் கைவிடுங்கள். உங்களது தூய்மையாக்கப்பட்ட ஆற்றலால், அவர்களும் படிப்படியாக உங்கள் மீதிருந்த தங்களது சொந்த எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்வார்கள். இயற்கை இவ்வாறு தான் இயங்குகிறது. என் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்; நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.
உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு
இவை உங்களுக்கு மனஅழுத்தம் கொடுக்க வடிவமைக்கப்பட்டவை ஆகும். சகாக்கள், முதலாளிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகிய இவர்களின் தொடர்ந்த அழுத்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சுமையை அவர்கள் மேலும், அவர்கள் உங்கள் மேலும் சுமத்தி உள்ளீர்கள். அடிப்படையானவற்றைத் தவிர மற்றவை அனைத்தையும் ஒதுக்கி விட முடியும். நீங்கள் அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினாலும், நிறைவேற்றாவிட்டாலும், அவற்றின் விழிப்புணர்வு மட்டுமே உங்களை வடிவமைக்கவும், ஏற்கனவே அமைதியின்றி இருக்கும் உங்கள் மனநிலையை இன்னும் தொந்தரவு செய்யவும் போதுமானதாகும். நீங்கள், முதலாவது (நம்மிடம் இருந்து) பற்றித் தெளிவாக இருக்கும் போது மற்றும் இரண்டாவது (மற்றவர்களிடம் இருந்து) கைவிட முடியும் போது, இந்த வகை தானாகவே மறைந்துவிடும். உங்களது இந்த புதிய தனித்துவம் மற்றவர்களையும், அவர்களது எதிர்பார்ப்புகளையும் அமைதியாக வடிவமைத்துவிடும்.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் நீங்கள் ஒருபோதும் அறநெறியிலிருந்து தவறக் கூடாது. இது பேரின்பத்தின் அடித்தளமாகும், அனைத்துப் பண்புகளின் தாயாகும். ஒரு ஒழுக்கமான வாழ்க்கை, எவ்வளவு பரபரப்பாகவும், சிக்கலாகவும் இருந்தாலும், அதன் பலன் அமைதியானதாகவே எப்போதும் இருக்கும்.
ஜூன் மாதம் என் கடந்த பதிப்பை (எனது உண்மை) எழுதிய பிறகு, நான் காமாக்யாவிற்கு (கிழக்கு இந்தியாவின் – அசாம்) பயணித்தேன். நான் அங்கு ஒரு முக்கியமான துவக்கப் பணியை முடிக்க வேண்டியிருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்த புத்த மடங்களுக்குச் செல்லும் வாய்ப்பும், அதற்கான நேரமும் எனக்குக் கிடைத்தது. பெரும்பாலானவை மிக அழகான தாவரங்களின் அற்புதமான மலர்ச்சியை விவரிக்கும் உயிரோட்டமுள்ள மலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.
நான் அங்குச் சென்றதில், ஆன்மீகத்தை நெறிப்படுத்தும் எந்த முயற்சியும் ஒரு மதத்தில் வந்து முடிவடைகிறது மற்றும் மற்ற மதங்களைப் போல், ஆய்வு செய்வதைவிட, கடைப்பிடிப்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற என் சொந்த சிந்தனையையே அது மீண்டும் உறுதிப்படுத்தியது. மதம் என்று ஒரு முத்திரை இடும் போது ஆன்மீகத்தின் ஆன்மா வெளியேறுகிறது. கண்டறிவதைவிடச் செயல்படுவதில் சுறுசுறுப்பாகி, லாமாக்கள் உண்மையைக் கண்டுபிடிப்பதை விட பாரம்பரியத்தைத் தொடர்வதில் மூழ்கி உள்ளனர்.
நான் காடுகளில் சரியான ஓர் இடத்தில் வேயப்பட்ட ஒரு குடிசையில் தங்குவதற்கு முன்பாக ஒரு நாடோடித் துறவியின் உற்சாகத்தில் கிழக்கு இமயமலையைச் சுற்றி வந்தேன். என் முந்தைய இருப்பிடங்களைப் போல் பொதுப் பார்வையிலிருந்து ஒதுக்கமாக இல்லாவிட்டாலும் இது இன்னும் முற்றிலும் அமைதியான மற்றும் புனிதமான இடமாக இருந்தது. நான் ஒரு மாத காலம் நீண்ட மந்திர சாதனாவில் அமர்ந்திருந்தேன். ஆ! என்ன ஒரு அருமையான சந்தோஷம்!
நான் சொல்வது என்ன என்று தெரிந்து கொள்ள, நீங்கள் இமாலயத்தின் தனிமையை அனுபவிக்க வேண்டும். இந்தத் தனிமையில் தான் உங்களுடைய எண்ணங்களின் போக்கு மற்றும் உங்களுடைய மனதின் இயல்பு இவற்றைக் கண்டறிய முடியும். உண்மையான அழகினை நீங்கள் கண்டறிவீர்கள். மேலும், அழகு காண்பவரின் கண்களில் இல்லை மாறாகக் கூர்ந்து கவனிப்பவரின் மனதில் இருக்கிறது. மனம் எவ்வளவு தூய்மையாக உள்ளதோ அவ்வளவு அதிகமாக அழகாக இருக்கிறது. மனம் எவ்வளவு அமைதியாக இருக்கிறதோ அவ்வளவு காலம் அனுபவம் நீடிக்கிறது. ஒரு வெற்று மனம் ஒரு பிசாசின் பட்டறை அல்ல; ஒரு ஆசை வசப்பட்ட மனம் தான் அவ்வாறாக இருக்கிறது. ஒரு வெற்று மனம், அதனது சொந்த உரிமையில், ஒரு தெய்வீக ஆசி கொண்டதாக ஆகிறது.
தன் சொந்த இயல்பைக் கண்டுகொண்ட ஒரு அமைதியான மனம் உங்களை விடுதலை அடையச் செய்கிறது. நீங்கள் கடந்த முறை சுதந்திரமாக உணர்ந்தது எப்பொழுது? உண்மையில் சுதந்திரமாக இருந்தது? அந்தச் சுதந்திரமானது, பற்றில்லாமல் ஓடும் ஆறுகளைப் போன்றதா, சாதாரணமாகக் கட்டுப்படுத்த முடியாத காற்றைப் போன்றதா, வானில் மிக உயரத்திற்கு உயரும் பறவை போன்றதா அல்லது உலக வழிகளைத் துறந்து பயம், குற்ற உணர்வு, அவமானம் மற்றும் மரபுகளால் மறைக்கப்பட்டிருந்த முந்தைய உணர்வுகளை உதறித்தள்ளிய ஒரு ஆண்டியைப் போன்றதா?
பற்களின் சுகாதாரத்திலிருந்து பிறந்த ஒரு இறுதியான சிந்தனை:
வாழ்க்கை ஒரு பற்பசையைப் போன்றது. ஆரம்பத்தில் முழுமையாகவும், நிறைவாகவும் உணர்கிறோம். முதல் சில உபயோகங்கள் வரை அந்த முழுமை தங்கியிருக்கிறது. அதன் பின்னர், அதன் வடிவத்தில் ஒரு பள்ளம் ஏற்படுகிறது. பின்னர் அடுத்தடுத்த அழுத்தத்தில் நுணுக்கமான கவனத்துடன் இருப்பவரானால், அதன் வடிவத்தைச் சரிசெய்து கொண்டே இருப்பீர்கள். பாதி அளவை அடைந்த பின் ஒவ்வொரு முறையும் நீங்கள் கீழிருந்து மேலாக அழுத்த வேண்டும். இதை நீங்கள் உணரும் முன், நீங்கள் அதன் இறுதியை அடைந்திருப்பீர்கள். அது முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கும் போது, கடினமாக அழுத்தினால் இன்னும் கொஞ்சம் வெளியே வரும்.
ஒருவரிடம் பற்பசை முற்றிலுமாக இல்லாமல் போவது அரிதாகும். கடைசி சில உபயோகங்கள், தற்போதைய அதிர்ஷ்டம் முடிவடைந்து, கடன் அல்லது எதிர்பார்ப்புகளால் தரைமட்டமான ஒரு மனிதனைப் போல் காட்சி தந்து, புதியது ஒன்று வாங்க வாய்ப்பினைக் கொடுக்கிறது.
இதேபோல், வாழ்க்கை முதலில் நீண்டதாக, முழுமையானதாக மற்றும் நிறைவாகத் தோன்றுகிறது. குழந்தை பருவத்தில் ஆண்டுகள் மிக வேகமாகச் செல்கின்றன. பிறகு, பெரும்பாலும் வாழ்க்கை அனுசரித்துப் போவதேயாகும் என்று உணர்வீர்கள். பிறகு, நீங்கள் உங்களையே வாழ்க்கையின் இறுதியில் கடினமாக அழுத்துவதாக உணர்வீர்கள். ஆனால் அந்த பற்பசையைப் போல் இந்த உடலை நீங்கள் நிராகரித்த பின்னர் ஒரு புதிய உடல் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அதுவே வாழ்க்கை என்பதாகும். உங்கள் உடலில் உள்ள லட்சக்கணக்கான செல்களில், ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் உள்ள அணுவின் ஆற்றலைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களது தேர்வாகும். அதைக் கதிரியக்கத்தின் பயம் காரணமாக புதைந்திருக்க விடுவது அல்லது அதிக பயன்பாடுடைய ஒரு அணு உலையை உருவாக்குவது அல்லது உங்களது இருண்ட பக்கத்தின் ஆட்சி மேலோங்கும் போது அழிவிற்கான ஆயுதங்களைச் செய்வது போன்றவற்றைத் தேர்வு செய்வது உங்களுடையதாகும்.
சென்று அனுபவியுங்கள்! வாழ்க்கையிலிருந்து சிறந்ததைப் பிழிந்தெடுங்கள், நரகத்தை அல்ல. கவலைகளை விட்டுவிடுங்கள் ஏனெனில் விதி என்ற புத்தகத்தில் என்ன உள்ளதோ அது வந்து நம்மைக் கடந்து சென்றாக வேண்டும். அர்த்தமற்ற போராட்டத்தைக் கைவிடுங்கள். ஒவ்வொரு நொடியும் விரிவடைவதைப் பாருங்கள். நித்திய இளமை, அழகு, பேரின்பம் மற்றும் மகிழ்ச்சி இவற்றில் பொதிந்துள்ள நறுஞ்சுவையுடைய கிடங்கினைக் கண்டறியுங்கள். பற்பசையைப் பகிர்ந்து கொள்வது போல் உங்களது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத பல் துலக்கும் தூரிகையைப் போல் நீங்கள், நீங்களாகவே இருங்கள்.
அமைதி.
சுவாமி
*****
This is a translation of Swamiji’s post – Himalayan Expectations.
Comments are closed as per the author's request.
1 COMMENTS
Please login to read members' comments and participate in the discussion.