நான் எழுதி கொஞ்சம் காலமாகி விட்டது. நான் இப்பொழுது உங்களுடன் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். இங்கே நான் மூன்று இடைப்பட்ட காலங்களில் எப்படி இருந்தேன் (எப்படி, எப்போது, எங்கே, என்ன) என்ற தகவல்களைத் தருகிறேன். நான் அதை சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயற்சி செய்கிறேன்.

மார்ச் மாதம் 15, 2010 அன்று பிற்பகலில் நான் என் ஆன்மீக பயணத்தைத் தொடங்கினேன். நான் வாரணாசி சென்றேன். மார்ச் 18 ல் வாரணாசிக்கு 80 கிலோமீட்டர் வடக்கில் ஒரு சிறிய கிராமத்தில் நான் என் குருவைக் கண்டேன். அவர் ஏப்ரல் 11 ஆம் தேதி எனக்கு சன்யாச வாழ்வை ஆரம்பித்து வைத்தார். எனது குரு எழுபத்து ஐந்து வயது நிறைந்த ஒரு நாகா துறவி ஆகும். நான்கு மாதங்கள் கழித்து அவரது ஆசிரமத்தை விட்டுச் சென்றேன்.  நான் என் சொந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு முற்றும் துறந்தேன் ஆனால் அவர் என்னை அவரது உடைமைகளைப் பராமரிக்கவும், அவரது இருக்கையை நான் எடுத்துக் கொள்ளவும் விரும்பினார். எனக்கு ஒரு “ஆன்மீக வியாபாரத்தை” நிர்வகிக்க விருப்பம் இல்லை.

நான் இமயமலைக்கு வந்தேன். நீல்கந்த் செல்லும் வழியில் பத்ரிநாத்துக்கு ஆறு கி.மீ. வடக்கில் நாராயண பர்வதா என்ற ஒரு மலை உச்சியின் மீது ஒரு பொருத்தமான குகையைக் கண்டுபிடித்தேன். அந்த இடம் பல அருவிகள், பல நீரோடைகள் மற்றும் ஒப்பற்ற சுத்தத்துடனான இமயமலை ஆகியவற்றை மூச்சுமுட்டுமாறு வியந்து பார்க்கும் விதத்தில் இருந்தது. நான் அங்கு இரண்டு முக்கியமான சாதனைகளைச் செய்தேன்.

இரண்டு மாதங்கள் கழித்து, என் சாதனாக்களை நிறைவு செய்த பின், நான் ஜகன்னாதரின் உறைவிடம் (பூரி) சென்றேன். நான் ஒரிசாவில் ஒரு பொருத்தமான கடலோர இடம் தேடி பயனில்லாமல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழித்தேன். நான் மீண்டும் இமயமலைக்குத் திரும்பி வந்தேன். இந்த முறை இமாலயக் காடுகளின் அதிக தூரத்தில் யாருமற்ற இடத்தைத் தேர்வு செய்தேன். அந்த இடத்தைப்பற்றி வேறு ஒரு சமயம் உயிரோட்டத்துடன் விரிவாக விளக்குகிறேன். சுருக்கமாக, அந்த இடம் அசாதாரணமான கம்பீரத்துடன் இருந்தது.

வழக்கமாக மான், காட்டுப் பன்றிகள், கரடிகள் மற்றும் பயங்கரமான கொறித்துண்ணிகள் போன்ற காட்டு விலங்குகள் தவறாமல் சஞ்சரிக்கும் ஒரு அற்புதமான காட்சியாக இருந்தது. அது இயற்கையின் கோல்ப் மைதானம் போல் இருந்தது. அங்கு என் சாதனாவை  நவம்பர் 19 ஆம் தேதி தொடங்கினேன். ஜனவரி 5 ஆம் தேதி எனது மிக முக்கியமான சாதனாவைத் துவங்குவதற்கு முன் உங்கள் எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்ப டிசம்பர் 27 ஆம் தேதி ஒரே ஒரு நாள் கீழே வந்தேன். அந்தச் சாதனா 150 நாட்கள் நீடித்தது. தியானம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு 17 மணி நேரம் தேவைப்பட்டது. நான் திரும்பி வந்ததும் இதைப் பற்றி மேலும் விவரிக்கிறேன். தெய்வீக அருளால் அது வெற்றிகரமாக நிறைவு பெற்றது. என் சாதனாவின் கடந்த 100 நாட்கள் நான் முழுவதும் தொடர்பில்லாமலும், தனிமையிலும், என் சொந்த எண்ணங்களில் இருந்தும் கூட விடுபட்டு இருந்தேன். அதன்  விளைவு எனக்கு நிறைவை விட்டுச் சென்றது.

நான் தற்போது எங்கிருக்கிறேன் என்பதைப்பற்றி கூற முடியாது. ஆனால் நான் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், முழு பேரின்பத்துடனும் இருக்கிறேன். எனக்குள் முழுமையாகக் கிட்டத்தட்ட அனைத்து நேரமும் அந்தப் பேரின்பம் வியாபித்துள்ளது. வெளியில் உலகம் எந்த நிலையில் இருந்த போதும், எந்த நேரமாக இருந்த போதும், அதைப் பொருட்படுத்தாமல் என் தியான நிலையில் தொடர்ந்து இருக்க கற்றுக் கொண்டேன். நான் எனது ஆன்மீகப் பயணத்தின் அடுத்த மற்றும் இறுதியான இலக்கை நோக்கிச் செல்கிறேன்.

எனது அடுத்த மற்றும் இறுதி சாதனா ஒரு உண்மையான சாதனாவை விடச் சோதனையான ஒன்றாகும். சாதனாவின் மிக முக்கியமான மையப்பகுதி முடிந்து விட்டது. நான் எதைத் தேடிக் கொண்டிருந்தேனோ அதைக் கண்டு பிடித்து விட்டேன். அது புலர்ந்து விட்டது. எனக்கு இப்போது அது கிடைத்து விட்டது. இப்பொழுது அனைத்தும் தெளிவாக இருக்கிறது. பிப்ரவரி 13, அதன் பின்னர் மே 11 ஆகிய தேதிகளில் என் தெய்வத்தை ஐயத்திற்கிடமின்றி அகக்கண்ணால் தரிசித்தேன். என் உடல் முழுவதும் ஊடுருவியிருந்த அந்த அசாதாரணமான பேரின்பம் அதன்பின் எல்லா நேரமும் என்னுடனேயே தங்கியிருக்கிறது. நான் எப்போது நினைத்தாலும் அந்த அனுபவத்திற்கு மீண்டும் செல்ல முடியும்.

இதைப் போன்ற நொடிப்பொழுதிற்கான அனுபவத்தைத் திரும்ப அனுபவிக்க முடியாது என்றால் அதனால் அடையும் பயன் எதுவாக இருந்தாலும் அது மிகச் சிறியதேயாகும். நமது முயற்சிகளின் விளைவாக ஏதாவது அனுபவம் ஏற்பட்டதென்றால், நம் விருப்பப்படி மீண்டும் மீண்டும் அதை அனுபவிக்க முடிய வேண்டும். நாம் நமது அணுகுமுறையை முறையாகப் பின்பற்றி இருந்தால் முந்தைய அதே சூழ்நிலையை அளிக்கும் போது அதே அனுபவம்  ஒவ்வொரு முறையும் நிகழ வேண்டும். எப்படியும் நான் திரும்பி வந்த பின்னர் இதைப் பற்றி மேலும் எழுதுவேன். என்னுடைய கடைசி சாதனாவை முடித்த பிறகு நான் திரும்பி வந்து உங்கள் அனைவரையும் பார்ப்பேன். இந்த மின்னஞ்சலின் முடிவில் நான் திரும்பும் தேதியை வெளிப்படுத்துவேன். அதற்கு முன் நான் என்னுடைய கண்டுபிடிப்பின் சாராம்சத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பின்வருமாறு:

கடவுள் அல்லது ஒப்புயர்வற்ற சிருஷ்டிகர்த்தா என்று யாரும் இல்லை என்று புத்தர் எடுத்துரைத்தார். கிருஷ்ணா தன்னைக் கடவுள் என்று பிரகடனப் படுத்தினார். ஐன்ஸ்டீன் எல்லாமே சக்தியின் கூட்டுத் தொகை என்று கூறினார். மீரா தனது உண்மையைக் கிருஷ்ணாவிடமும், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியிடமும், துளசிதாஸர் ராமரிடமும், சங்கராசார்யார் உருவமற்றதிலும் மற்றும் பலர் அவரவர்களுக்குச் சொந்தமான விதத்தில் உண்மையைக் கண்டு கொண்டனர். பெரும்பாலான மக்கள் காமம், குரோதம், அகங்காரம் போன்றவை அவர்களுக்கு நல்லதில்லை என்று ஏற்றுக்கொண்டனர்;  அப்படியானால், அவர்கள் இன்னும் ஏன் அவற்றில் ஈடுபாட்டுடன் உள்ளனர்? நான் என் சொந்த உண்மையை அனுபவிக்க விரும்பினேன். நான் என்னுடைய அனுபவத்தையும், தற்போதைய நிலையையும் வர்ணிப்பதற்கு வார்த்தைகளை முழுவதுமாக இழந்து விட்டேன்.

சுய உணர்தல் என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. அது ஒரு ஆஹா என்று உணரும் கணமும் அல்ல. இது போன்ற உணர்தலை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல் ஒரு நல்ல திருவருள் தரிசனமாக இருக்கலாம், சுய உணர்தல் இதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. முழு விருப்பத்துடன் முயற்சி செய்யத் தயாராக  உள்ள யார் வேண்டுமானாலும் சுய உணர்தலை அடைய முடியும். இத்தகைய சுய உணர்தலின் மலர்ச்சி, பதில்களை மட்டுமே நம்மிடம் தக்கவைக்கும். உங்களிடம் இனி எந்தக் கேள்வியும் இருக்காது. அறிவுப்பூர்வமாக அடிப்படைத் தத்துவம் அல்லது கோட்பாடுகளின் கொள்கைகளை நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம் ஆனால் இத்தகைய புரிந்து கொள்ளுதல் உங்களை இன்னும் கடுமையானவராக இருக்கச் செய்யலாம். நீங்கள் அதன் நம்பகத்தன்மை குறித்த எந்த உறுதியும் இல்லாத கோட்பாட்டின் வெறும் சந்தாதாரராக மட்டுமே ஆகிவிடக் கூடும்.

நீங்கள் தெய்வீக வடிவம் ஒன்று உள்ளது என்று நம்பினால், நீங்கள் இந்தப் பிறவியிலேயே அந்த வடிவத்தைப் பார்க்க முடியும். நீங்கள் தெய்வீகம் உருவமில்லாதது என்று நம்பினால், எதிர்வரும் காலத்தில் ஆழமான மெய்மறந்த ஈர்ப்புத்தன்மையை (சமாதி) அனுபவிக்க முடியும். இதைத்தான் பல முறை நான் அனுபவித்தேன். உங்களின் உலகம் உங்களுடைய எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது. உங்கள் உலகத்தில் ஒரு கடவுள் இருந்தால், எல்லா நேரமும் உங்களின் எண்ணம் அவர் மேல் இருந்தால், அவரது வடிவம் உங்கள் முன் பிரகடனமாகும்.

உங்களது உலகத்தில் பேரின்பம் இருந்தால், எல்லா நேரமும் உங்களின் எண்ணம் அதனை நோக்கியே ஒருமுகமாக இருந்தால், நீங்கள் அத்தகைய பேரின்பத்தை அனுபவிப்பீர்கள். இது ஒரு கடினமான செயல் தான் ஏனென்றால் ஒரே சிந்தனையில் நீண்ட காலம் தியானம் செய்வதற்கு முற்றிலும் நிலையான சஞ்சலமற்ற ஒருமுகப்படுத்தப்பட்ட மனது தேவைப்படுகிறது. தீவிர முயற்சியுடன் ஆரம்பித்தால் இதை அடைய முடியும்.

புதிதாகப் படிப்பவருக்கு, வாசிப்பது கடினமாக இருந்தாலும் காலப்போக்கில் தேர்ச்சி அடைவதைப் போல் நீங்களும் உங்களது வழியில் பல தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உறுதியாக இருந்தால் நீங்கள் மிக நிச்சயமாக இலக்கை அடைவீர்கள். பக்தி அல்லது தியானத்தை தவறாகச் செய்தால் இலக்கை ஒருபொழுதும் அடைய முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பேரின்ப அனுபவங்களின் நிலைகளைப் பற்றிய அல்லது ஒத்த ஏனைய அசாதாரணமான கூற்றுக்கள் குறித்து பல்வேறு வேதம் அல்லது விளக்க உரை நூல்கள் கூறும் எந்த விஷயங்களையும் நீங்கள் உணரமாட்டீர்கள். இதை உங்களால் சரியாக செய்ய முடிந்தால் நீங்கள் ஒரு குறுகிய காலத்தில் உங்களின் தெய்வீகத் தன்மையை அனுபவிக்கவும், அடையவும் முடியும். இதற்கு மிகவும் தீவிரமான ஒரு முயற்சி தேவை என்பதை நான் அறிவித்தே ஆக வேண்டும்.

நான் திரும்பி வந்த பின் “சரியானது எது” என்ற என்னுடைய முறையைத் தெளிவுபடுத்துவேன். உண்மை மிக எளிமையானது. இது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை அனுபவிப்பதென்பது முற்றிலும் மாறானது. பெரும்பாலான மக்களுக்குத் தவறானது எது, சரியானது எது என்பது தெரியும். ஆனாலும் ஏன் தங்களை மீண்டும் மீண்டும் நேர்மையற்ற மற்றும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்? இது ஏனென்றால் அவர்களது மனமானது அடக்கப்படவில்லை.

ஒரு அமைதியற்ற மனம் மற்றும் அதன் மாற்றங்கள் (சித்த விருத்தி) அவர்களைத் தங்கள் உடல் மூலமாக மட்டுமே இந்த உலகை அனுபவிக்கவும், சந்தோஷப்படவும் உந்தித் தள்ளுகிறது. தூய்மையான ஒழுக்கமானது, பக்தியாலோ அல்லது தியானத்தாலோ, உங்கள் மனதை வழிக்குக் கொண்டுவர உதவ முடியும். விவரிக்க முடியாத, இடைவிடாமல் இயங்கும் ஒரு பேரின்பத்தைப் பின்னர் நீங்கள் அனுபவிப்பீர்கள். நான் இவற்றைப் பற்றிப் படித்ததுண்டு. இடை இடையே அதைப் போன்ற மற்றும் வேறுவிதமான அனுபவங்களைப் பெற்றதுண்டு. சமாதியின் உண்மையான நீடித்த அனுபவமானது நம்பமுடியாத ஒன்றாகும். பின்னர் மிகச் சிறிய முயற்சி கூட இல்லாமல் அந்தப் பேரின்பம் உங்களுடன் அனைத்து நேரமும் தங்கி விடுகிறது.

அறிவார்ந்து உண்மையைப் புரிந்து கொள்வதற்கும், உள்ளபடியே அனுபவிப்பதற்கும் இடையேயான வேறுபாட்டை விளக்க விரும்புகிறேன். யாரோ ஒருவர் கண்புரை நோயால் அவதியுறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குத் தனது பார்வைக் கோளாறு பற்றித் தெரியும். இந்த விழிப்புணர்வு மட்டுமே அவரது பார்வை சரியாகப் போதுமானதா? அவருக்கு எங்கே பிரச்சனை என்று தெரியும். இதன் விளைவாக சரியாகப் பார்க்க முடியாதது தனது இயலாமை என்றும் தெரியும். அவரது கண்புரையை அகற்றுவதற்கு ஒரு சிகிச்சை செய்தால், கண் பார்வை சரியாகிவிடும் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அறிவுப்பூர்வமாக இதைத் தெரிந்திருக்கிறார்.

இந்த விழிப்புணர்வு மட்டுமே தடையற்ற பார்வைக்கு உதவ முடியாது. எந்த அறிவுசார் குறைபாட்டின் விளைவும் அவரது பலவீனத்திற்குக் காரணம் இல்லை. எனவே எந்த அறிவுசார் திறமையாலும் அல்லது திருத்தத்தாலும் இதைச் சரி செய்ய முடியாது. அவர் தனது பார்வையைச் சரி செய்ய ஒரு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதேபோல், உலகத்தைப் பற்றிய உங்களின் சிதைந்து போன பார்வை அல்லது உங்களின் குழப்பமடைந்த மனம் (சித்தம்) ஆகியவை ஒரு அறிவார்ந்த பிரச்சனையால் இல்லை.

எந்தத் தத்துவத்திலாவது சேர்வது அல்லது ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டினை உண்மை என்று நம்புவது — இவை இரண்டுமே மனதின் செயல்பாடுகள் ஆக இருப்பவை — சமாதி அல்லது உங்களின் தெய்வ தரிசனத்தைப் பற்றி விட்டு விடுங்கள், இவை உங்களுடைய உண்மைத் தன்மையைக் கூட கண்டறிய உதவப் போவதில்லை. மிகவும் அழகான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் மனதைப் பழக்குவதன் மூலம் உங்களின் உண்மை இயல்பையும், பேரின்பத்தின் இடைவிடாத ஓட்டத்தையும் அனுபவிக்க முடியும். தீர்மானமாகாததும், முழு கட்டுப்பாட்டில் இல்லாததுமான மனம் பக்திப்பணியை அல்லது தியானத்தை சரியாகவும், தூய்மையாகவும் செய்ய விடாது. தூய்மை இல்லாத இந்த நிலையில், நீங்கள் ஆழ்ந்த எதையும் அனுபவிப்பது சாத்தியமில்லை. உங்களுடைய அனுபவத்தைத்

திரும்பப் பெற முடியுமானால், உங்களுடைய  உலகமும் நிரந்தரமாக மாறிவிடும். நீங்கள் முற்றிலும் உள்முகமாகத் திரும்பியிருப்பீர்கள். பின்வரும் மூன்று நிலைகளின் வழியாகச் செல்வீர்கள்:

சார்ந்திருத்தல்

இது முதல் நிலை ஆகும். எல்லாவற்றிற்கும் நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்து இருக்கிறீர்கள். அவர்களின் கருத்துக்கள் அல்லது விமர்சனம் உங்களுக்குள் நேர்மறை அல்லது எதிர்மறை உணர்ச்சிகளை எழுப்புகின்றன. அவர்களின் இருப்புத் தன்மை அல்லது இல்லாத தன்மை உங்களுக்குள் நல்லதையோ, கெட்டதையோ உணரவைக்கிறது. அவர்களது நடவடிக்கைகள் உங்களுக்குத் திருப்தி அல்லது வருத்தத்தைக் கொடுக்க முடியும். சாராம்சம் என்னவென்றால் உங்கள் எண்ணத்தில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். இதன் விளைவாக உங்களின் உலகம் அவர்களைச் சுற்றிச் சுழல்கிறது. உங்களால் தனிமையில் வாழ முடியாது. நீங்கள் உட்புறமாக திரும்பத் தொடங்கியதும், வெளியுலக, ஆன்மீக மற்றும் தார்மீக விஷயங்களில் நீங்கள் செய்யும் அனைத்திலும் முழுமையான ஒழுக்கத்தை ஆழப்பதியவைத்துக் கடைப்பிடித்தால்,  நீங்கள் இரண்டாவது நிலையை அடைகிறீர்கள்.

தன்னையே சார்ந்திருத்தல்

தவறாத அறநெறி மற்றும் தூய்மையான ஒழுக்கம் ஆகியவற்றால் நீங்கள் உங்கள் சொந்த கருத்தை உருவாக்க ஆரம்பிப்பீர்கள். உங்களைப் பற்றியும், உங்களின் உலகத்தைப் பற்றியும் ஒரு பார்வை உருவாகிறது. மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி பெரும்பாலும் பாதிப்படையாமல் இருக்கும் ஒரு பார்வை. எனினும், நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைப்பற்றி அவர்களால் இப்பொழுதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நீங்கள் அதிக சுய சார்புள்ளவராக ஆகும் போது நீங்கள் தனிமையை ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய துணையாகக் காண்பீர்கள்.

அந்தத்தனிமை என்ற ஒருவருடன் எப்போதாவது சிறிதளவு நேரம் செலவிடுவதைப்பற்றி நீங்கள் கவலைப்படமாட்டீர்கள். உங்களின் மனநிலை ஒரு ஸ்திரத்தன்மையைப் பெறத் தொடங்குகிறது. இதன் காரணமாக நீங்கள் செய்ய வேண்டிய பெரும்பாலான விஷயங்களைச் சந்தோஷத்துடன் செய்வதாகக் காண்கிறீர்கள். எனினும், விழிப்புணர்வுடன் இல்லாத போதெல்லாம் உங்கள் உள் உலகத்தில் அமைதியற்ற எண்ணங்களும், உணர்வுகளும் மேலோங்குகின்றன.

உலகத்தைப்பற்றிய உங்களுடைய பார்வை இன்னும் அடுத்தவர்களிடமிருந்து கிடைத்த அறிவின் அடிப்படையில் கருத்தமைக்கப்பட்டிருக்கிறது. உங்களின் உண்மையான இயல்பைப்பற்றிய ஒரு பார்வை கிடைக்க ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து அயராது, கண்மூடித்தனமாக இல்லாமல் சுய சுத்திகரிப்பைச் செய்தால், நீங்கள் மூன்றாவது நிலைக்குச் செல்வீர்கள்.

சுதந்திரம்

என்றும் அழியாத ஒரு பேரின்பம் உங்களுக்குள் ஊடுருவி இருப்பதை நீங்கள் அனுபவிப்பீர்கள். உங்களிடம் இருந்து ஒரு சுடரொளி கசிந்து பிரகாசிக்கும் மேலும் இனி உங்களுக்கு எதைப்பற்றியும் எந்தக் குழப்பமும் இருக்காது. இப்போது அனைத்தும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும். உங்களுக்குள் அந்த உணர்தல் மலர்ந்துள்ளது. நீங்கள் இனி மேலும் மனதால் இயக்கப்படுபவர் இல்லை. நீங்கள் எண்ணங்கள் அற்ற அமைதியான மனத்துடன் மிக்க தெளிவு நிலையையும், அதிக விழிப்புணர்வு நிலையையும் வளர்த்துக் கொள்வீர்கள்.

உங்கள் மனதின் தெளிந்த சுத்தமான நிலையைக் கண்டு கொண்டுவிட்டால் உங்களைச் சுற்றி உள்ள எல்லாப் பொருட்களின் உண்மைத் தன்மையும் உங்களுக்குப் புரிந்துவிடும். இந்த நிலையை நீங்கள் தாண்டுவதற்கு முன் அனைத்திற்குமான ஒரு பதில் உங்களுக்குக் கிடைத்துவிடும். உலகத்தின் உணர்வுகளால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உணர்வீர்கள். இனி உலக சந்தோஷங்களில் எந்தவித ஈடுபாடோ அல்லது  எந்தவிதமான ஈர்ப்போ, ஆசையோ உங்களுக்கு மீதமிருக்காது.

உங்களுடைய ஆன்மீக அனுபவங்களைக்கூட அதிகப் பொருள் நிறைந்ததாகக் கருதுவது நிறுத்தப்படும். நீங்கள் சுதந்திரமானவராக ஆகிவிடுவீர்கள். அதுவே உங்களின் உண்மையான இயல்பாகிறது. எப்போதும் ஒரு பேரின்ப நிலையில், நீங்கள் எடுத்துக் கொள்ளும் அனைத்துக் காரியங்களும் உங்களைப் பேரின்பம் என்ற விளைவுக்கே இட்டுச் செல்லும். உங்கள் பார்வையில் தென்பட்ட தெய்வமும்,  உங்கள் சமாதி நிலையும் எந்த நேரத்திலும் உங்களை விட்டு நீங்காது. சூரியனின் கீழே உள்ள அனைவரும் எப்படி பாகுபாடில்லாத சூரிய ஒளியைப் பெறுகிறார்களோ அதுபோல உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் கூட அந்தப் பேரின்ப நிலையை அனுபவிப்பர். நீங்கள் எதையோ அல்லது யாரையோ பார்க்கும் போதெல்லாம், அவர்கள் தூய பேரின்பமாகவே தோன்றுவர்.

இந்த வாழ்நாளிலேயே, ஒரு குறுகிய காலத்தில், இந்த மூன்றாவது நிலை மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட நிலையையும் பெற முடியும் என்ற அனுபவம் பெற்று நான் வந்திருக்கிறேன். ஆனால் இது எளிதாக வருவதில்லை. சரியான வரையறையும், சமநிலையும் கொண்ட தீவிர முயற்சி தேவைப்படுகிறது. நான் எதிர்காலத்தில் இதைப்பற்றி விரிவாக எழுத இருக்கிறேன். இந்த மின்னஞ்சல் சரியான ஒரு கருத்தரங்கமோ அல்லது என் உண்மையைப் பற்றி விரிவாக விளக்கப் பொருத்தமான சாதனமோ இல்லை. ஆனாலும் நான் முக்கிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

இது இனி மேலும் ஒரு மாயத் தோற்றமில்லை. இப்போது நான் நாடிச் செல்வதற்கு எதுவும் இல்லை. இனி நான் எதையும் சாதிக்கவோ அல்லது செய்யவோ விரும்பவில்லை. என் சபதம் (சங்கல்பா) மற்றும் என் உண்மையைச் சோதிக்கும் பொருட்டு, நான் தனிமையில் இன்னும் சிறிது காலம் செலவிட வேண்டும். தற்போதைய காலத்தில் நீங்கள் இது ஒரு வெறும் உருவகக் கதை தான் என்று ஒருவேளை நம்பிக் கொண்டிருந்தால், நீங்கள் பேரின்பத்தை அனுபவிக்க விரும்பினால், சத்தியத்தைப் பற்றிய என் பதிப்பைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

இன்னும் எவ்வளவு காலம் தேவையற்ற சோர்வுடன் கஷ்டப்பட்டு உழைக்கப் போகிறீர்கள்? ஓட்டுநர் உரிமத்தை வழங்கும் அதிகாரி, உங்களால் கண்ணை மறைக்கும் இடங்களைச் சரியாகப் பார்க்க இயலாத காரணத்தால், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மறுக்கிற வரை, கடைக்கு நீங்களே ஓட்டிக் கொண்டு போகும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்ற பாசாங்குடன் தொடர்ந்து இருக்கப் போகிறீர்களா? நீங்கள் எதற்காகவாவது அல்லது யாருக்காகவாவது காத்திருக்கிறீர்களா? இன்னும் எவ்வளவு காலத்திற்கு சுவையற்ற உடனடி காபி பருகுவதைத் தொடரப் போகிறீர்கள்? உங்களின் உலகத்தை மனிதர்களைச் சுற்றி கட்டுவதைத் தொடரப் போகிறீர்களா? உங்கள் பிள்ளைகளின் வெறும் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் திருப்தி அடைந்தே வயதில் முதிர்ந்தவராக ஆகப் போகிறீர்களா?

நீங்கள் மட்டுமே கேட்கக்கூடிய ஒரு தட்டும் சத்தத்தின் மூலம் தூக்கத்தில் இருந்து ஒரு நாள் எழுப்பப்படுவீர்கள். அந்தச் சத்தமே உங்களை இறுதியாகத் தூங்க வைக்கப் போவதாகும். அந்த நேரத்தில் நீங்கள் ஏற்கனவே உங்களின் கடைசி உணவு, கடைசி தொலைப்பேசி அழைப்பு, கடைசி மின்னஞ்சல், கடைசி தூக்கம், கடைசி குளியல் மற்றும் உங்களின் கடைசி உரையாடல் ஆகியவை உங்களுக்குக் கிடைத்துவிட்டதாக நீங்கள் உணர்வீர்கள். கடைசி சொல் வேறு எவருடையதாகவோ இருக்கும். உங்களுடையதாக இருக்காது. நீங்கள் இந்த உலகில் தங்கவோ அல்லது போகவோ விரும்புவது இரக்கமற்று நிராகரிக்கப்படும்.

நீங்கள் இந்த உலகைத் துறக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. மாறாக, வாழக் கற்று கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். நேர்த்தியாக, நிம்மதியாக, ஆனந்தமாக உலகத்தை சரியாகப் புரிந்து கொண்டு மற்றும் உண்மையைப் பற்றிய உங்களின் சொந்த அபிப்ராயத்துடன் வாழுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்த வீட்டில் வாழ்கிறீர்கள், சொந்த ஆடைகளை அணிகிறீர்கள், சொந்த வேலையைச் செய்கிறீர்கள், சொந்த வாகனத்தை ஓட்டுகிறீர்கள். ஆனால், உலகைப் பற்றிய உங்கள் பார்வையும், உங்களைப்பற்றிய உங்கள் பார்வையும் உங்களுடைய சொந்தப் பார்வை இல்லை. இது உங்களைச் சுற்றி உள்ள உலகத்தால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கத் தேவையில்லை.

உங்களின் உண்மையான இயல்பைக் கண்டுபிடிக்கும்போது, உலகத்தின் அனைத்து நடவடிக்கைகளின் மத்தியிலும் கூட நீங்கள் ஒரு துறவியாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களின் தற்போதைய வாழ்க்கை முறையைத் தொடர்ந்து அடிக்கடி உணர்ச்சிகளின் மேலும், கீழுமான போராட்டத்தில் சவாரி செய்யமுடியும் அல்லது உங்களின் தெய்வீகப் பக்கத்தை அனுபவிக்கவோ, அம்பலப்படுத்தவோமுடியும். அலைமேல் வழுக்கிச் சென்று விளையாடுபவர் புதியவரோ அல்லது நிபுணத்துவம் வாய்ந்தவரோ, யாராக இருந்தாலும் சவாரியைத் தொடங்க மிகப் பெரிய அலைக்காகக் காத்திருக்க வேண்டும்.

நீங்கள் குறைந்தது ஒரு உண்மையான, தளராது நீடித்த, உறுதியான மற்றும் தீவிரமான முயற்சி செய்ய வேண்டும் என்பதே முக்கியமான விஷயமாகும். உன்னைச் சுற்றிப் பார். மிகவும் ஒழுங்கீனமாக உள்ளது. உன்னுடைய வாழ்க்கையில் இது தேவையா? உள்ளே உள்ள அசுத்தத்தை நீக்கினால் வெளியில் உள்ளது தானாகவே நீங்கத் தொடங்கிவிடும். உங்களுக்கு வெளியே உள்ள அசுத்தத்தை நீக்கினால் உங்களின் உள்ளத் துப்புரவு தானாகவே தொடங்கிவிடும். உங்களின்  சொந்த வாழ்க்கையை மற்றவர்களுடன் வாழுங்கள், ஆனால் அவர்களால் தூண்டப்பட்டதாக அல்ல. உங்களுடைய சொந்த பதிப்பாக இருக்கட்டும். உங்களின் சொந்த உண்மையின் கண்டுபிடிப்பால் மிகுந்த ஆச்சரியமடைவீர்கள். இது உங்களை  திடுக்கிட வைக்கும், மந்திரத்தால் கட்டுண்டும், வாயடைத்துப்போயும், முற்றிலும் நிறைவாகவும் இருக்கச் செய்துவிடும். நீங்கள் அனைத்தும் வழங்கப்பட்டவராக நிற்பீர்கள்.

இந்த வாழ்க்கை ஒரு நீண்ட பயணத்தைப் போன்றது. வழியில் சில திசைத்திருப்பங்கள், சில நிறுத்தத்தின் அறிகுறிகள், வேகமாகச் சென்றதற்கான ஒன்று அல்லது இரண்டு எச்சரிக்கைகள், போக்குவரத்து மெதுவாகச் செல்லும் நிர்பந்தம், வழியில் சில அழகான காட்சிகள், குழிகளினால் ஒன்றிரண்டு நிறுத்தங்கள், சில நேரங்களில் வண்டி முறிவு ஆகியவை இருக்கலாம்… நீங்கள் உங்கள் இலக்கை அடையும் வரை தொடர்ந்து சென்று பின்னர் வீட்டிற்குத் திரும்பிவர விரும்புவீர்கள். இலக்கை அடைவதைவிடச் சவாரி செய்யும் போது அனுபவிக்கும் ஆனந்தம் முக்கியமானது என்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இலக்கு என்பது வெறும் இன்னொரு நிறுத்தமே ஆகும். சென்று அனுபவியுங்கள்! ஆனால், உட்புறமாகத் திரும்பி. 

வெளிப்புறமான பயணம் ஒரு மாயை ஆகும், உள்ளே உள்ளதே உண்மையாகும். வெளியே உள்ளது உங்களைச் சுற்றி நகரும் போக்குவரத்தைப் போன்றது. அதேசமயம் உள்ளே உள்ளது நீங்கள் உங்களின் சொந்த காரை ஓட்டுவதுபோல் ஆகும். நீங்கள் வழியை மாற்றவோ, அதிகக் கூட்டமாக உள்ள நேரத்தை மாற்றவோ, மிகவும் குறைந்த போக்குவரத்து உள்ள வேறு ஒரு நெடுஞ்சாலையை எடுக்கவோ முடியும்.

நீங்கள் உள்ளே எடுக்கும் முடிவுகள் உங்களின் வெளி உலகத்தை மாற்றுகின்றன. இந்த மின்னஞ்சல் மிக நீளமாக ஆவதற்கு முன் இப்போதைக்கு இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். மிகச் சிறந்த ஒன்றிரண்டு வேலைகளை முடித்த பின்னர் உங்களைப் பார்ப்பேன். இந்த ஆண்டு முடிவதற்குள் அது நடைபெறும்.  என் மனதில் தற்போது உள்ள இரண்டு தேதிகள் 9-10-11 (9 அக்டோபர்) அல்லது 11-11-11 (11-நவம்பர்) ஆகும். நான் முன்பு தொடர்பு கொண்டதிலிருந்து ஏறக்குறைய ஒரு முழு ஆண்டு ஆகிவிடும்.

உங்களை எல்லாம் பார்க்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன விரும்பினேனோ அதை அடையப்பெற்றேன். அது கிடைத்தபின் நான் விரும்பியது நானே என்று உணர்ந்தேன். இந்த உணர்தல், நானே உணர்தலாக இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. அதன்பிறகு ‘நான்’ என்பதே இல்லை. அடுத்த சில வாரங்களில் உங்களுக்கு நான் மீண்டும் எழுதுவேன். நிச்சயமாக ஆகஸ்ட் இறுதியில் சரியான தேதியைக் குறிப்பிட்டு அதற்குத் தகுந்தபடி நான் தொடர்பு கொள்வேன்.

நீங்கள் அமைதியாக இருக்க நான் வாழ்த்துகிறேன். மீண்டும் விரைவில் என்னிடமிருந்து தகவலை எதிர்பார்க்கவும்.

தயவு செய்து இந்தச் செய்தியை, பெறுபவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட ஆசையை வெளிப்படுத்திய அனைவருக்கும் மற்றும் இதனால் பயன் அடைவார்கள் என்று நீங்கள் நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் அனுப்பவும்.

சுவாமி.

[முதலில் ஒரு மின்னஞ்சலாக எழுதப்பட்டது]

*****

This is a translation of Swamiji’s post – My Truth.