ஒரு வாசகர் பின்வரும் கேள்வியைக் கேட்டிருந்தார்:

நமஸ்காரம் சுவாமிஜி,
உங்களுடைய வலைப்பதிப்பை படிக்க முடிவதிலிருந்து, என் பிரார்த்தனைகளுக்கு பதில் (சிறிதளவு) கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. என்னுடைய கேள்விகளின் தொகுப்பு:

  1. சந்தோஷம் என்றால் என்ன?
  2. சந்தோஷத்தை எப்படி நாம் அடைவது?
  3. சந்தோஷத்தை அடைய எதை நாம் விட வேண்டும்?
  4. சந்தோஷத்தை அடைய எதை நாம் விடக் கூடாது?

வாழ்க்கையின் இந்தச் சூழ்நிலையில், (வாழ்க்கை மற்றும் மரணத்தைப் பற்றிய கேள்வியைப் போல் தெரிகிறது) சந்தேகங்களைப் போக்கவும், முன்னேறுவதற்கான பாதையைக் காட்டவும் உங்களின் சில வழிகாட்டுதல்கள் உதவக்கூடும். நமஸ்காரம்

  1. பொய்யான மகிழ்ச்சியானது வெளிப்புற நிகழ்வுகளால் பெறப்படுகிற மற்றும் இயக்கப்படுகிற ஒன்றாகும். அதனால் உணர்வுகளின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு இணைக்கப்பட்ட, பொய்யான மகிழ்ச்சியின் மறுபக்கம் துக்கமாகும். உண்மையான மகிழ்ச்சியானது பேரின்பம் என்றும் அழைக்கப்படுகிறது. அது மனதின் இயற்கை நிலையாகும். மனதின் உள்ளார்ந்த இயல்பு தூய பேரின்பமாகும்.
  2. அனைத்து ஆசைகளையும் கைவிடுவது அல்லது நீங்கள் பக்தியில் உறுதியாக மனதை நிலைநாட்டியிருந்தால் உங்களின் இஷ்ட தெய்வத்திடம் முழுமையாகச் சரணடைவது அல்லது தியானத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால் மனதை அடக்குவது ஆகியவை மகிழ்ச்சியை அடையத் தேவையானவையாகும். இந்த மூன்றும் பரஸ்பரம் தனித்தனியாக இருப்பது இல்லை. எவ்வளவு அதிகமாக உங்களால் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக நீங்கள் மற்றவர்களிடம் இருந்து பெறுவீர்கள். அந்த “மற்றவர்” நீங்கள் மகிழ்ச்சியைக் கொடுத்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் இயற்கை அதைப் போன்ற பல மடங்கை வேறு யாரையாவது தேர்ந்தெடுத்து அவர் மூலமாகக் கொடுக்கும். நீங்கள் உள்நோக்கித் திரும்பியதும், வெளி நிகழ்வுகள் மூலம் முற்றிலும் பாதிக்கப்படாமல் நீங்கள் எப்போதும் சந்தோஷ நிலையில் இருப்பீர்கள். நான் இதை என்னுடைய சொந்த அனுபவத்தின் மூலம் சொல்கிறேன்.
  3. உங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் மற்றும் உங்களுடைய மனஉறுதி மற்றும் பிரக்ஞையை வலுவிழக்கச் செய்யும் எல்லாப் பாவனைகளும் (உணர்வுகளும்) கைவிடப்பட வேண்டும். இது பயிற்சியின் மூலம் வரும். நீங்கள் முயற்சி செய்யத் தயாராக இருந்தால் நீங்கள் பலனைக் காண்பீர்கள்.
  4. மகிழ்ச்சியை அடையும் நோக்கத்தில் ஒருவர் அறநெறியைக் கைவிடக் கூடாது. அறநெறியைத் தவிர்த்து சந்தோஷம் தரும் எந்த கர்மாவும் பொய்யான, மாயையான மற்றும் மழுப்பலான சந்தோஷமாகும்.

மகிழ்ச்சியானது தனிப்பட்ட ஒருவரிடமிருந்து பதிலுக்குப்பதில் கிடைக்கும் என்று திட்டமிடப்படுவதில்லை, அது கடவுளுடன் சம்பந்தப்பட்டதாகும். மற்றவர்களை சந்தோஷப்படுத்த நீங்கள் முடிவு செய்யும் போது, பரமாத்மா உங்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்க ஆசீர்வதிக்கிறார். அவை இரண்டுமே சுய உணர்தலுக்கு அல்லது ஆன்மீக இலக்கை அடைவதற்குத் தேவையானவையாகும்.

ஒருவரின் மகிழ்ச்சி நிலையை எது அழிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, இமாலய எதிர்பார்ப்புகளை மீண்டும் படிக்கவும்.

ஹரே கிருஷ்ணா
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – The Pursuit of Happiness.