காடுகளில் வாழும் வாழ்க்கை ஒரு தெய்வீகமான அனுபவம் ஆகும். அதாவது பூச்சிகள், கொசுக்கள் மற்றும் எலிகளின் உடன்பாடின்மையைத் தவிர்த்துப் பார்த்தால்! கொடிய மிருகங்கள் பட்டயம் பெற்ற சமுதாயத்தினரைப் போல நடந்து கொள்கின்றன, ஆனால் பூச்சிகள் மற்றும் எலிகள் காடுகளின் ஒரு பாதுகாப்பான இடத்திற்காகத் தங்கள் மனசாட்சியை அடகு வைத்து விட்டதைப் போல நடந்து கொள்கின்றன. அவை அனைத்தும் உங்களுக்குப் பயிற்சி அளிக்கவே அங்கு உள்ளன. அவற்றை அனுசரித்து வாழப் பழகிக் கொண்டு விட்டால், அதன் பின் மனிதர்களை அனுசரித்து வாழ்வது ஒரு குழந்தையின் விளையாட்டைப் போன்றதாகும்.

ஏழு மாதங்களுக்கான என் முக்கியத் தியானத்தின் போது, நான் ஒரு சிதிலமடைந்த குடிசையிலேயே வாழ்ந்தேன். அந்தக் குடிசை, உங்கள் வசம் உள்ள பல சாதனங்களைப் போல், பழைய மற்றும் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாக இருந்தது. அந்த ஓலைக் கூரையில் புல்லைவிட மிக அதிகமாகச் சிலந்தி வலைகள் தான் இருந்தன.

சுவர்களில் இருந்த ஓட்டைகள் சிலந்தி வலைகளை விட அதிகம் இருந்தன. ஏனென்றால், ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக ஏனோதானோவென்று வைக்கப்பட்ட மரக் கட்டைகளால் அந்தச் சுவர்கள் செய்யப்பட்டிருந்தன. விருப்பமில்லாத அல்லது குறைவான சம்பளம் பெற்ற அல்லது இரண்டும் சேர்ந்த தொழிலாளி ஒருவரால் இந்த வேலை செய்யப்பட்டிருப்பது போல் தோன்றியது. வலைகள் புத்திசாலித்தனமாக மனதில் வடிவமைக்கப்படும் பொறிகளைப் போன்ற எண்ணங்களையும், அந்த ஓட்டைகள் உலகின் இருப்பைப் பற்றிய மனித ஊகங்களின் வெளிப்படையான ஓட்டைகளையும் எனக்கு நினைவூட்டின.

நூற்றுக்கணக்கான தேனீக்கள், குளவிகள் அந்த இடத்தைச் சுற்றி ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. ஏனெனில், அந்த இடத்தின் தரையில், ஆயிரக்கணக்கான சிறிய மலர்கள் நீலம், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் மலர்ந்திருந்தன. அதில் குறிப்பாக மஞ்சள் நிறப் பூக்கள் குரங்குகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. அந்தப் பழமையான அமைதியற்ற குரங்குகளுக்கு அதிநவீன சுவை அரும்புகள் இருப்பது போல் தோன்றின.

வாய்ப்பு வழங்கப்படுகிற போது, எப்படிப் பிச்சைக்காரர்கள் கூடத் தேர்வாளர்கள் ஆக முடியும் என்பதை நீங்கள் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட அறிவியல் கோட்பாட்டின்படி குரங்குகள் என் மூதாதையரின் உறவினர்களாக இருந்திருக்கலாம் என்பதை நம்பும் அதே சமயம் அவற்றிடம் எந்த மரியாதை உணர்வும் எனக்கு வரவில்லை. ஏனென்றால், போக்கிரியைப் போன்ற உணர்ச்சிவசப்பட்ட மனதும், ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும் பபூனைப் போன்று எதிலும் நிலைத்து இருக்கத் தவறும் உறுதியற்றதைப் போன்ற தவிப்பும் அவற்றிடம் இருந்தன. ஆனால் அவை மிக அழகாக இருந்தன. பூஜ்யத்திற்கும் குறைவான குளிர் மற்றும் நடுக்கத்தில் இருந்து பாதுகாக்கும் அவற்றின் மேல் உள்ள கம்பளி போன்ற உருப்புக்களை எப்பொழுதாவது ஒருமுறை நான் பாராட்டுவதை உணர்ந்து இருக்கிறேன்.

இருந்தும் குரங்குகளால் இன்னும் இந்தத் துறவியின் மரியாதையை வெல்ல முடியவில்லை. பழுப்பு நிற நகர வாசிகள் போலல்லாமல் — நான் மனிதக்குரங்குகளை மட்டுமே குறிப்பிடுகிறேன் — இவற்றுக்குக் கருப்பு முகங்கள், நிலக்கரி போன்ற இருண்ட கால்கள் மற்றும் வெளிர் சாம்பல் நிற ரோமங்களும் இருந்தன.

குரங்குகளிடம் இருந்து தேனீக்களிடம் செல்வோம். பல சந்தர்ப்பங்களில் தேனீக்கள், எறும்புகள், சிலந்திகள் இவற்றை நெருக்கமாகக் கண்காணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தத் தருணங்களிலிருந்து ஒரு சுவாரஸ்யமான உதாரணம் உதித்தது. அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: பின்வருமாறு: தேனீக்கள் மற்றும் எறும்புகள் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கின்றன என்றும் அதில் தேனீக்கள் அமைதியற்றதாக இருப்பதையும் அறிந்தேன். மாடு, ஆடு அல்லது மான் போல் அவை ஓய்வாக இருப்பதை நான் கண்டதில்லை. அதனது கூட்டில் கூடத் தொடர்ந்து ரீங்காரித்துக் கொண்டே இருக்கிறன. எறும்புகள், தேனீக்கள் இரண்டிற்கும் மத்தியில் உள்ள ஒரு பொதுவான அம்சம், அவை வேறு ஒருவருக்காக வேலை செய்கின்றன— அவற்றின் ராணிகளுக்காக. அவை இரண்டும் காலனியாதிக்கத்தின் அமைப்புகளில் வாழ்கின்றன.

மற்றொரு குறிப்பிடத்தக்க முக்கியமான விஷயம் அவை சேமிக்கும் பொறுப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. அவை வேறு ஒருவருக்காக வேலை செய்வதால் அவற்றின் விதி ஒரு அற்ப ஊதியத்துக்காகக் கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. தேனீக்கள் இதுவே ஒரு நிதர்சனமான வாழ்க்கை என்று அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானவை தொழிலாளிகள் போல் வேலை செய்வதால், இதுவே சரியான, ஏற்புடைய, ஒழுக்கமான, சமூகரீதியான, பரிசளிக்கக்கூடிய வேலை செய்வதற்கான ஒரே வழி — பொதுவாக மனித மனத்தை ஒத்திருக்கும் அதிர்வு.

தேனீக்கள் ஒருபோதும் நின்று யோசிப்பதைத் தேர்வு செய்யாதது போல் தோன்றும்; அவை ஒரு குழுவின் மொத்த அறிவைக் கொண்டு வேலை செய்கின்றன — அனைவரும் இந்த அணுகுமுறையைக் கடை பிடித்தால் அது நல்ல பலனைத் தான் தரும். எனக்குத் தெரிந்தவரை ராணித் தேனீ மற்ற “தொழிலாளி” தேனீக்களை விடச் சற்று பெரிய அளவிலானது. ஆனால் இந்த ஒரு வேறுபாடு மட்டுமே இல்லை, அதற்கென்று தனித்துவமான வாசனை உள்ளது. அதுவே அதற்கு அந்த அரச நிலையை வழங்குகிறது.

நான் எனது “சுவாரஸ்யமான உதாரணத்தை” உங்களுக்கு வழங்கும்முன், சிலந்தியின் வழிகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

சிலந்தியானது ஒரு தனிப்பட்ட மற்றும் சுயாதீனமான இயக்குனர் ஆகும். ஒரு சிலந்தி ரீங்கரிப்பதில்லை அல்லது உணவிற்காகத் தனது வழியை விட்டுக் கொடுப்பதில்லை. கிட்டத்தட்ட அறிவை வெளிப்படுத்தும் விதமாக அது ஒரு இடத்தைத் தேர்வு செய்து அமைதியாக அதன் வேலையைத் தொடங்குகிறது. அது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அது வலையைப் பின்னியபின், அதன் உள்ளோ அல்லது அதன் மேலோ தங்காமல் பெரும்பாலும் வலைக்கு வெளியே தங்கி பொறுமையாகக் காத்திருக்கிறது. அமைதியின்மையின் எந்த அறிகுறியையும் நான் எந்தச் சிலந்தியிடமும் பார்த்ததில்லை. அது தற்போதைய தருணத்திற்காக வாழ்கிறது மேலும் அது காலனிகளிலோ அல்லது இழிவான அடிமைத் தளையிலோ வாழ்வதில்லை. அது குருட்டு விசுவாசத்தில் வாழாமல் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்கிறது. சில நாட்கள் வரை எந்த இரையும் அதன் வலையில் மரணம் அடையவில்லை என்றால் அந்தச் சிலந்தி ஒரு புதிய வலையை நெய்யத் தொடங்குகிறது என்பதையும் நான் கவனித்தேன்.

மிகவும் திறமையான நபர் போல், அளவுக்குமீறிய வேலை செய்யாமல் சிலந்தியானது தனது வேலையைச் செய்து முடிக்கிறது. சில உயிரினம் பறந்து வந்து நேராக வலையில் சிக்கிக் கொள்கிறது; சிலந்தி உடனடியாக நகரத் தொடங்குகிறது. அது வேகமாகவும், உஷாராகவும் ஒரு எலியைப் போல் இந்த நேரத்தில் இருக்கிறது. அது தனது இரையை நெறித்துக் கொன்று திருப்தி அடையும் வரை அதைத் தனது உணவாக்கிக் கொள்கிறது. நேரம் செல்லச் செல்ல ஒவ்வொரு புதிய நாள் புலரும் போதும் அதன் வலையில் ஒரு புதிய உணவை இயற்கையின் அருள் அதற்குத் தொடர்ந்து வழங்குகிறது. சிலந்தியானது எல்லாம் கற்று, யாவுங் கடந்த பக்தரைப் போல் நல்ல கர்மாக்களே செய்து பூரணச் சரணாகதியில் வாழக் கற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து கர்மாக்களும் இறுதிப் பலனான கனிகளைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று தெரிந்து, உணவு வரும் என்ற நம்பிக்கையில் அது வாழ்கிறது.

எனவே! நீங்கள் சிலந்தி அல்லது தேனீ போல் எதுவாக இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம். தேர்வு உங்களுடையது. அவரவர்களின் வேலை செய்யும் முறையைப் பொறுத்தே பலனை இந்தப் பொருள் உலகாலும் தர முடியும். என்னுடைய கவனம் இங்கே ஆன்மீக வெற்றியைப் பற்றியதாகும்.

ராணித் தேனீயே உங்களது மனது. உங்கள் மனதின்படியே தொடர்ந்து வேலை செய்தால், நீங்கள் உங்களது சொந்த அபாயத்தின் அடிப்படையிலேயே செய்யத் தேர்வு செய்கிறீர்கள்; அதுவும் மிகக் குறைவான மதிப்புடையவைக்காக. அது உங்களைத் தேவையற்ற உழைப்பினால் மிக மும்மரமாக இருக்க வைக்கும். அதே போல் ரீங்காரம் செய்து கொண்டே உங்கள் கடைசி மூச்சு இருக்கும் வரை அமைதியற்றுக் குதித்துக் கொண்டிருப்பீர்கள்.

தேனீ போல் இருக்கும் போது நீங்கள் எந்த மலரின் மகரந்தத்திலிருந்து சாற்றினைப் பிரித்தெடுக்கிறீர்களோ அந்த மலரின் வாசனையை மட்டுமே அனுபவிக்கக் கூடும் ஆனால் உங்களுக்குத் தேனைப் பகிர்ந்துகொள்ள அனுமதி இல்லை. கூட்டில் உள்ள தேன் ராணித் தேனீக்கும் (மனம் என்று வாசிக்க) கூட மிகவும் அதிகம். வேறு யாரோ முழுத் தேனீப் பண்ணையையும் ஒரு நாள் எடுத்துச் சென்று விடுவர். உங்கள் ராணிக்காக வேலை செய்ய வேண்டாம். எழுச்சியைத் தொடங்குவது வெறும் ஒரு உள்உணர்வாக இருக்கலாம் ஆனால் அத்தகைய கிளர்ச்சியில் நீடித்திருக்க அதிக முயற்சியும், அறிவும் தேவைப்படுகிறது. ஆனால் அதன் வெற்றியைப் பார்க்க மேலே கூறியவையுடன் அபரிமிதமான விடாமுயற்சி, பிடிவாதம், ஒழுக்கம் ஆகியவை தேவை.

நீங்கள் ஒரு தேனீயின் அமைதியற்ற மற்றும் உற்சாகமற்ற சலித்துப்போன வாழ்க்கைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் தங்களின் இறுதிக் காலம் வரை மிக்க கவனத்தோடு சோம்பல் இல்லாமல் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்; உங்கள் பணி மிகப் பெரியது — ஒரு சத்தமான உலகில் அமைதியைத் தேடுவது மற்றும் உங்கள் இலக்கு, ராணித் தேனீயை உங்களுக்குக் கீழ்ப்படியும் அடிமையாகத் திருப்ப வேண்டும் என்ற துணிச்சலான பணி ஆகும். இது அடையக்கூடியது தான். உங்கள் மனதின் அமைதி உங்களை அசாதாரணமான ஒரு மனிதராக்கிவிடும் மற்றும் பின் வாங்காத அறநெறி உங்களுக்கு வாசனையைக் கொடுக்கும். அந்த வாசனை ராணித் தேனீயை மட்டுமல்ல உங்களைக் கடந்து செல்லும் அனைத்து மற்ற உயிரினங்களையும் பைத்தியம் ஆக்கிவிடும்.

ஒரு பாம்பு, சிங்கத்தை விட ஆயிரம் மடங்கு மிகவும் கொடியதாக இருக்கலாம், ஆனால் சிங்கத்தின் கம்பீரமும், நடைமுறையும் அதை அரசனாக முடிசூட்டியுள்ளது. சிங்கத்தின் மற்ற பல சிறப்புகளில், அது சாதாரணச் சூழ்நிலையில் எதையும் கொல்லாது என்பதும் ஆகும். தன் உணவிற்காக மட்டுமே கொல்லும்.

எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது உங்களுக்குச் சுலபமாக வரக்கூடிய விஷயம் இல்லை என்றால், நீங்கள் சிலந்தி போன்ற பண்புடன் இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம். அதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மன மாற்றம் தேவைப்படுகிறது. ராணியை அடிமைப்படுத்தும் தேனியைப் போலத் தொடர்வது ஒரு வித கிளர்ச்சியாகவும், தீர்மானமாகவும் இருக்கும்போது தேனீயிலிருந்து சிலந்தியைப்போல் மாறுவது பெரிதும் ஒரு மறுமலர்ச்சியைப் போன்ற விஷயமாகும். அடர்த்தியான ஒரு குழுவாக வாழ்ந்ததில் இருந்து நீங்கள் இப்போது தனிமையில் அமைதியாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் சரியான கர்மாவை செய்துகொண்டே நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் சரணடையக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீங்கள் துள்ளிக் கொண்டு சுற்றிவருவதைக் கைவிட்டு அசையாமல், உங்களது கடவுளைப்பற்றிய பாவனையுடன் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் எடுக்கும் முயற்சியின் பயனின்மை அல்லது பயனை உங்கள் தெய்வத்திடம் விட்டுவிட்டு, நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்ய வேண்டும். நீங்கள் இனியும் தேன் அல்லது மலரின் வாசனையில் இருந்து தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்தில் ஆர்வம் உள்ளவராக இருக்கமாட்டீர்கள். சிலந்தியானது வேட்டையாடும் தனிப்பட்ட நோக்கத்துடன் அதன் வலையைப் பின்னுவதைப் போல், நீங்களும் உங்களது இஷ்ட தெய்வத்தைப் பார்க்கும் நோக்கத்துடன் மட்டுமே உங்களது அனைத்து வேலைகளையும் செய்வீர்கள்.

அனைத்து நேரமும், இரையைக் கவரும் பாவனையில் சிலந்தி உறுதியாகத் தயார் நிலையில் இருக்கிறது – அது சுவர் மீது இருந்துகொண்டு அதன் வலையில் எந்த வெளி உயிரினத்தையும் முதலில் பார்த்தவுடன் ஒரு கணமும் தயங்காமல் அதை நோக்கி நகரும்; நீங்கள் கூட, உண்மையான பக்தனைப் போல, பக்தி பாவனையிலேயே இருந்து கொண்டு எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடாமல் பக்திசாரமான சேவையைச் செய்ய வேண்டும். எந்த வாய்ப்பும் உங்களை விட்டு நழுவி விடாமல் இருக்க அதிக அளவு முழுகவனம் தேவைப்படுகிறது. அந்த சிலந்திக்குச் சமமாக உங்கள் சரணாகதி பாவனை இருந்தால் இயற்கை தவறாமல் உங்களைப் பார்த்துக்கொள்ளும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் தெய்வ அருளுக்குத் தகுதி பெற்றவராவீர்கள். சிலந்தியானது வலையைப் பின்னுகிறது ஆனால் ஒருபோதும் அதில் சிக்கிக் கொள்வதில்லை. அதுபோல் தன்னை உணர்ந்த நபர் இந்த உலகில் வாழ்ந்தாலும் அதன் வலையில் மாட்டிக் கொள்வதில்லை. வலையானது தனது இரையை மாட்டவைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், கவனமாக இல்லாவிடில் தானே மாட்டிக் கொள்வோம் என்பதும் சிலந்திக்குத் தெரியும். அதுபோல் காலம் மட்டுமே அவரை மற்றவரிடமிருந்து பிரிக்கிறது என்றும், அவர் கவனமாக இல்லாவிட்டால் ஒரு நாள் அது அவரையும் சிக்க வைத்துவிடும் என்றும் அவருக்குத் தெரியும். அவர் இந்த உலகில் பற்களுக்கு நடுவில் உள்ள நாக்கு போல் வாழ்கிறார்; சுவையை அனுபவிக்கிறார் ஆனால் கடிபடுவதோ மெல்லப்படுவதோ இல்லை.

தேன்கூடு என்பது தேனீக்களின் வேலை, வலையானது சிலந்தியின் வேலை — அதைப் போல் உங்களது வாழ்க்கையே உங்களின் உருவாக்கம் ஆகும். நீங்கள் மலர்களில் இருந்து தேன் சேகரிக்கவும், உங்களது சொந்த கூட்டைக் கட்டவும் பல முறை கடினமாக வேலை செய்தீர்கள். உங்கள் உலகைப் பின்னிக்கொண்டிருக்கும் போது பல சிரமங்களை எதிர்கொண்டிருப்பீர்கள். சுற்றிச்சுற்றி தன்வலையை நெசவு செய்யும் சிலந்தி போலல்லாமல், பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் மற்றும் செய்த வேலையை மதிப்பீடு செய்யவும் அரிதாகவாவது நீங்கள் வேலை செய்வதை நிறுத்தி இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்க மட்டுமே முடியும். நீங்கள் சிலந்தியோ அல்லது அதன் இரையோ, வலையில் சிக்கிக் கொண்டால் நீங்கள் போராட்டம் மற்றும் வேதனையை அனுபவிக்க மட்டுமே வரவேற்கப்படுவீர்கள்.

போய் அனுபவியுங்கள்! உங்களுக்குள் உள்ள தேனை உறிஞ்சத் தெரிந்து கொள்ள முடியும் வரை, பற்றில்லாமல் மலர்களில் இருந்து சாற்றினை உள்ளீர்த்துக்கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களது சொந்த வலையை இடைவிடாத நாட்டத்துடன் நெசவு செய்யும் போது, அது ஒரு பொறியாக மாறும்படியாக மிகவும் சிக்கலாக வடிவமைக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். அதைவிடவும் சிறந்தவற்றிற்கு நீங்கள் தகுதியானவர்.

அமைதி.
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – The Two Spiritual Approaches.