கடந்த வாரம் நடவடிக்கை நிரம்பியதாக இருந்தது. நிறைய மக்களைச் சந்திப்பது, சொற்பொழிவுகள் கொடுப்பது மற்றும் கீர்த்தனைகளை அனுபவிப்பதுமாக இருந்தது. மக்கள் அன்றாடம் அதிக அளவில் வந்து பல மணி நேரம் பஜனைகளைப் பாடினர். நான் மெய்மறந்த நிலையில் அமர்ந்து அதை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் பக்தி மற்றும் அன்பை ஆழமாக உணர்ந்தேன். அவர்கள் கரகரப்பான மற்றும் இனிமையான குரல்களில் இசை சேர்த்துப் பாடினார்கள். மகிழ்ச்சியை அது பேரானந்த நிலைக்கு அதிகரித்தது. தெய்வீக அன்பின் வெளிப்பாடுகளான கண்ணீர், சிரிப்பு, மயிர்க்கூச்செரித்தல், நடுக்கம் ஆகியவை புரண்டோடின.

இப்பொழுது, நான் உடல் மற்றும் பிராணனை யோகப் பயிற்சியில் ஈடுபடுத்தி, தனிமையின் துணையுடன் இன்பமாக இருக்கப் போகிறேன். நான் இப்போது பக்தியைப் பற்றி விளக்க விரும்புகிறேன். பக்திப் பாதையானது, தியானம் மற்றும் ஒருமுகப் படுத்துதல் போன்று கடினமானது அல்ல. எனினும், பக்தியால் மட்டுமே உண்மையை அனுபவிக்க வேண்டுமானால் முழுமையாகச் சரணடைய வேண்டும். தியானத்தையும் சேர்த்து நடைமுறை படுத்தும் போது பக்தி மிக விரைவில் செழுமையாகி அற்புதமான விளைவை அளிக்கின்றது.

நீங்கள் அனைத்து உலக விஷயங்களில் இருந்தும் உங்கள் மனதை எடுத்து உங்கள் ஆன்மாவை ஒருமுகப் படுத்தி வழிநடத்த ஒன்பது வடிவங்களைக் கொண்ட “நவதா பக்தி” என்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த இறுதிக் கட்டத்தை அடைவது எளிதல்ல. உங்களின் உறுதியற்ற மனமானது அதன் அமைதியற்ற போக்குகளால் உங்களைப் பாதிக்கப்பட்டவனாக்கி, பக்தித் தொடர்பான சேவைகளைச் செய்யத் தேவையான அமைதி மற்றும் சாந்தத்தைப் பழுதாக்கி விடும். மூன்று வகையான பக்தர்கள் உள்ளனர். அவை பின்வருமாறு:

பாவனை இல்லாதவர்

இந்த வகைப் பக்தன் பொதுவுடைமைவாதி வகையைச் சேர்ந்தவன். அவர்களுக்குக் கடவுளுக்கோ அல்லது மனித இனத்திற்கோ சேவை செய்யும் விருப்பம் கிடையாது. அவர்கள் மதத்தைத் தவறாக ஆன்மீகம் என்று நினைக்கிறார்கள். காமம் மற்றும் ஆதாயத்தினால் உந்தப்பட்டு இந்தப் பக்தர்கள் கோயில்கள் கட்டுவது, மத நிறுவனத்திற்குத் தேவையான பெரிய வளாகங்களை வாங்குவது, நிறையத் தெய்வங்களின் மூர்த்திகளை நிர்மாணிப்பது, பெரும் பரபரப்பான ஊர்வலங்களை நடத்துவது போன்றவற்றிலேயே அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய பக்தர்கள் சில கோவில் குழுக்களில் சேர்ந்து கொண்டு இவ்வுலக விஷயங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இவர் தன்னைத் தானே மிக உயர்ந்தவராக நம்பிக் கொண்டிருக்கும் போது, இவரை ஒத்த மனநிலை கொண்ட மக்கள், இவரை மிகப் பெரிய பக்தர் என்று மதிக்கிறார்கள்.

மற்ற நேரங்களில் புலன்களுக்கு அடிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, அவர்கள் ஒவ்வொரு பூஜையிலும் ஒரு சிறப்பான இடத்தை எதிர்பார்க்கிறார்கள். உண்மையில், இந்தப் பக்தர்கள் தங்கள் விகாரங்களைக் கை விட முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் கீழ்த்தரமான கண்கள் அனைத்துப் பெண்களையும் காமப் பொருளாகவே நோக்குகின்றன. தங்கள் அகங்காரத்தால் உந்தப்பட்டுச் சிறிது உராய்வு ஏற்பட்டாலும் கொதித்து எழுகின்றனர். அவர்களது சமூக-மத நடைமுறைகளின் ஏமாற்றும் இயல்பினால், எப்பொழுதும் மிகப் பெரிய பக்தர்கள் மத்தியில் தன்னையும் ஒருவனாக எண்ணிக் கொள்கிறார்கள்.

எப்போதாவது, அவர்கள் ஒன்று அல்லது இரண்டு பஜனைகள் மூலம் தங்களையும், மற்றவர்களையும் மகிழ்விப்பார்கள். இத்தகைய குணம் கொண்டவர்கள் நிஜ பக்தர்களே அல்ல. அவர்கள் தங்களது கால்களைப் பிறர் தொடும் போது பெரும் மகிழ்ச்சி அடைந்து, ஒரு சித்தருக்குக் குறைவில்லாமல் வெற்று ஆசீர்வாதத்தைத் தாராளமாக உளறிக் கொட்டுவார்கள். உடனுக்குடன் ஆலோசனை கொடுப்பதில், குறிப்பாக ஆன்மீகத்தில், அவர்களது கருத்தை உங்களுக்குள் புகுத்த மிகவும் கடினமாக வேலை செய்வர்.

கடவுள் எந்த ஊர்வலத்தின் மத்தியிலும் தனது வடிவத்தை வெளிப்படுத்தியது இல்லை. அவர், கல்லில் செய்யப்பட்ட எந்த ஒரு சிலையில் இருந்தும் வெளியே தோன்றியது இல்லை. அவர் கல்லிலும் இருக்கிறார் ஆனால் அவர் கல் இல்லை. இந்த வகைப் பக்தர்கள் ஒரு பெரும் மாயையில் வாழ்கின்றனர். கருணை என்று அழைக்கப்படும் சில தெய்வீகத் தலையீடு மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும். அவர்கள் யாருடைய சொல்லுக்கும் செவி சாய்க்கமாட்டார்கள்.

இரவல் பாவனை

ஒரு பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த வகையின் கீழ் இருக்கின்றனர். இந்தப் பக்தர்கள் அவர்களது சொந்த உண்மையை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவர்களது வளர்ப்பு முறை மற்றும் அடுத்தவர்களிடமிருந்து தெரிந்து கொண்டவை அவர்களை அவ்வாறு வடிவமைத்து உள்ளது. மற்றவரிடமிருந்து இரவலாகப் பெற்ற தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் வெளிவரத் தொடங்கியுள்ளனர், மேலும் வழிபாட்டு முறை, பிரார்த்தனை, பக்திப்பாடல்கள், அது தொடர்புடைய நடைமுறைகள் ஆகிய அனைத்தையுமே அவர்கள் இரவலாகப் பெற்றுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் எந்த நேரடி அனுபவத்தையும் பெறாதவர்களால் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டவையாகும்.

உபதேசிப்பவர்கள், யார் மூலமாவது கேட்டிருப்பார்கள் அல்லது முற்றிலும் வேறுபட்ட ஒரு காலத்தைச் சேர்ந்த சில புத்தகங்களைப் படித்திருப்பார்கள். அவர்கள் அவற்றில் புதைந்துள்ள அந்தரங்கமான அர்த்தத்தைக் கிரகித்துக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பக்தர் தனது அன்றாட நடைமுறைகளைப் பக்தியுடன் நிறைவேற்றுவதில் முனைப்பாக இருப்பர். அவர் சிலை தான் கடவுள் என்று நம்புகிறார்! அவர் தனது கடவுளை ஒரு குழந்தையிடம், உதவி வேண்டிய ஒருவரிடம், ஒரு நாய் அல்லது ஒரு கரப்பான் பூச்சியிடம் பார்க்கத் தவறுகிறார். அவர் மற்றவர்களுடைய வலியை உணர்வதில்லை; இரக்கமும், கருணையும் எங்குமே காணப்படுவதில்லை. மனிதர்களால் அறியப்படாத காரணங்களால், அவருடைய அந்தக் கடவுள் அவரது வெளிவழிபாடு என்ற வெற்றுச் செயல்கள் மூலம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் நம்ப ஆரம்பித்துவிடுகிறார். நமக்குள்ளே ஒரு நேர்த்தியான பீடம் அமைப்பதை விட வெளியே கடவுளின் பீடத்தைச் சுத்தம் செய்வதில் அதிகக் கவனம் செலுத்துகிறார்.

பல்வேறு மதங்களின் பல பயிற்சியாளர்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகிறார்கள். இத்தகைய பக்தர்கள் அறநெறியை வசதிக்காகத் தேர்ந்தெடுப்பதும், தேவைப்படும் போது அதைக் கைவிடவும் செய்வார்கள். அவர்கள் ஆசைகளால் பீடிக்கப்பட்டு ஆத்திரம் மற்றும் ஆணவத்தினால் ஆட்டுவிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பக்தர் அறநெறியை, சுயச் சுத்திகரிப்பிற்கும் அவரது வாழ்விற்கு ஆதாரமாகவும் கொண்டால், பக்தியின் முதல் நிலையை விடச் சிறப்பாக, உணர்வடைய வாய்ப்பு உள்ளது. உள்ளார்ந்த தூய பாவனை அவரது இதயத்திலிருந்து எழுந்து அவரை உயர்த்தத் தொடங்குகிறது.

சொந்த பாவனை

இந்த உயர்ந்த வகைப் பக்தர் அரிதானவர் மற்றும் அவர் அவரது சொந்த உண்மையைக் கண்டவர். துளசிதாசர், மீரா, சூர்தாசர், சைதன்ய மஹாபிரபு போன்றவர்களைப் போல் நீங்களும் உட்புறமாகத் திரும்பி உள்ளீர்கள். இன்னும் நீங்கள் உங்கள் தெய்வத்தின் வடிவத்தை வெளிப்படையாக வணங்குகிறீர்கள், ஆனால் உங்களது சொந்த பாவனையைக் கொண்டே. உங்களது உள்நோக்கிய வழிபாட்டின் செயல்கள் வெளியே தெரியும் போது துல்லியமாக வெளிப்புற வழிபாடு போல் பார்ப்பவர்களுக்குத் தவறாக எடுத்துக் காட்டுகிறது. இது சமய உட்பிரிவுகள் ஏற்படக் காரணமாகி, தேடுதல் உள்ளவர்களை மேலும் குழப்புகிறது.

இந்தப் பக்தர் வெளிப்புறப் பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகளையும் மிஞ்சி விட்டார். மிகவும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையின் காரணமாகவும், அதைவிட அதிகமான நன்நடத்தையினாலும், நீங்கள் உங்களை முழுவதுமாகச் சுத்திகரித்து விட்டீர்கள். சாராம்சமாக, நீங்களே ஒரு தெய்வமாக ஆகி விட்டீர்கள். குழந்தையைப் போன்ற கள்ளங்கபடமற்ற தன்மையுடன், உலகத்தின் வழியை அலட்சியப்படுத்தி, நீங்கள் உங்களது நேரத்தைத் தனிமையில் கழிப்பீர்கள். எனினும், தனிமையில் இருக்கும்போது கூட நீங்கள் உங்களின் தனிப்பட்ட கடவுளுடனேயே எப்போதும் இருப்பீர்கள். மேலும் மிகப் பெரிய கூட்டத்தின் மத்தியிலும் நீங்கள் உங்கள் தெய்வத்துடன் முற்றிலுமாகத் தனியாக இருப்பீர்கள்.

ஆசைகளும் அதனால் அனைத்து விகாரங்களும் உங்களை விட்டு முற்றிலும் நீங்கி விட்டன. எப்படி இருளும், ஒளியும் ஒன்றுசேர்ந்து இருக்க முடியும்! நீங்களே ஒளி, அன்பு, அமைதி, பேரின்பம் மற்றும் அறிவு ஆகியவற்றின் ஒளியாக ஆகிறீர்கள். நீங்கள் உங்களது கடவுளைக் கண்டு பிடித்து விட்டதால், நீங்கள் அமைதியான மனநிலையை (வைராக்கியா) வளர்த்துக் கொள்கிறீர்கள் — இது சுய உணர்தலுடன் இயற்கையாக வரும் ஒரு பலனாகும். நீங்கள் சில அற்புதங்களைச் செய்யத் தயாராக உள்ளீர்கள். உங்கள் இருப்பே, முதல் இரண்டு வகைப் பக்தர்களையும், அதே போல் வாழ்வின் பல்வேறு துறைகளில் உள்ள மற்றவர்களையும் மாற்றிவிடும்.

ஏற்கனவே பட்டம் பெற்ற ஒரு மாணவருக்கு எப்படி அந்த வகுப்புப் புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லையோ அது போலவே நீங்களும் சடங்குகள் மற்றும் புத்தக நடைமுறைகளுக்கு மேல் வளர்ந்து விட்டீர்கள். எப்படி நோக்கினும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எவராவது கடவுளைக் கண்டுள்ளாரா?

பக்தி என்பது ஆன்மீகச் சேவை என்ற ஒரு செயல் ஆகும், புத்திக் குறைவானச் சடங்குகள் அல்ல. இதை ஒரு இரவல் பாவனையில் தொடங்குவது பரவாயில்லை. தூய்மை மற்றும் பொறுப்பு இவற்றை உங்கள் வாழ்க்கையிலும், மற்றும் வாழும் முறையிலும் ஊக்கத்துடன் அதிகரித்துக் கொண்டே இருந்தால் கூடிய விரைவில் உங்களது உண்மைப் பாவனையைக் கண்டுபிடிப்பீர்கள். ஒரு பெரிய பக்தரின் தரக்குறியீடாக இருப்பது, பெரும்பாலான சூழ்நிலைகளில் அவரது விடாப்பிடியான வைராக்கியமும், ஒரு நடு நிலையான மனமுமே ஆகும். நீங்கள் உங்கள் ஆசைகளை முயற்சியின்றிக் கைவிடும் போதும், அதே ஆசைகள் மீண்டும் உங்களுக்கு வராமல் இருக்கும் போதும், உங்கள் ஆண்டவனுடைய தரிசனம் உடனடியாக உங்களுக்குக் கிடைக்கிறது.

உங்களால் பரபரப்புடன் துதிக்க முடியும் அல்லது அலுத்துப்போய் மன்னிப்புக் கேட்க முடியும், பிச்சைக்காரனின் வேடத்தில் சில்லறைகளை மட்டுமே சேகரிக்க முடியும். தகுதியுள்ளவராக ஆகுங்கள்; எதுவாக இருந்தாலும் – எவராக இருந்தாலும் இல்லை – நீங்கள் வேண்டுவது உங்கள் மடியை வந்தடையும்; நேரடியான அர்த்தத்தில் இல்லை!

தூய்மை, சரணடைதல் மற்றும் வைராக்கியத்துடன் செய்யப்படும் பக்தி அனைத்துத் தளைகளிலும் இருந்து உங்களைப் பிரித்து விடுகிறது. இருப்பினும் அது உங்களை, உங்களது முதிர்ந்த (ப்ராரப்த) கர்மாவிலிருந்து தப்புவிக்க முடியாது. ஆனால் அது உங்களைச் சலனமடையாதவராக ஆக்கிவிடும். கர்மத்தின் சட்டங்களில் இருந்து தப்பிக்க முடியாது. உங்களது சொந்த பாவனையை உணர்ந்த பின், நீங்கள் படிப்படியாகப் பரபக்தி என்ற இறுதி நிலைக்குச் செல்வீர்கள். நான் அதைப் பற்றிப் பிறகு எப்பொழுதாவது எழுதுவேன்.

எனவே, நீங்கள் உங்கள் ஆசைகளைக் கொன்று, இந்தப் பொருள் உலகைத் துறந்து, புனிதமான பெயர்களை எல்லா நேரங்களிலும் உச்சரிப்பீர்களா? நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்றால், ஒன்று நான் கூற நினைத்ததை இதைவிட மோசமாகக் கூற முடியவில்லை அல்லது இதைவிட மேலாக நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு இருக்க முடியாது. எப்படிக் காற்றை உங்களால் கொல்ல முடியும்? உங்களால் ஆசைகளைத் தடுக்கவோ, கொல்லவோ முடியாது, அப்படித் தடுத்தால் நீங்கள் ஓர் எரிமலையைப் போல் வெடித்து விடுவீர்கள். வாழ்க்கை உங்களுக்கு வழங்குவதை அறநெறியின் எல்லைகளுக்குள் தொடர்ந்து அனுபவியுங்கள்.

சுய சுத்திகரிப்பை நோக்கி இடைவிடாது வேலை செய்யுங்கள். அதன் கூடவே, நீங்கள் கடவுளை நம்பினால் மற்றும் சரணடைவதைக் கையாள முடியுமானால் பக்தியைத் தொடங்குங்கள். பக்தி என்பது முதல்-பார்வையில் ஏற்படும் காதலுக்கு ஒப்பிடக்கூடியது அல்ல. காலப்போக்கில் அன்பும், பிணைப்பும் உங்களது தெய்வத்தின் மீது வளர்ந்து இது ஓர் உறவு போன்று ஆகிறது. உங்களால் சரணடைய முடியாது என்றால், பக்தி உங்களுக்கானது அல்ல. அப்படியானால், நீங்கள் தியான பயிற்சியை ஆரம்பிக்கலாம். கடுமையான நடைமுறை பயிற்சியைத் தாங்கத் தயாராக இருக்க வேண்டும். கடினமான முயற்சியே குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும்.

முதலில் தங்களது ஆசைகளின் உள்ளார்ந்த இயற்கை இயல்பினைப் புரிந்து கொள்ளாமல் ஆசைகளுக்குத் தடைவிதிக்க முயற்சிக்க வேண்டாம். தூய பக்தி அல்லது சரியான தியானத்தின் காரணமாக அவை நிச்சயமாகத் தானாகவே போய் விடும்; இந்த இரண்டும் இணைந்திருந்தால் அது உங்களை வெகுவிரைவில் விடுவித்துவிடும்.

உங்களது உள்வழிபாட்டைக் கண்டறியும் வரை வெளிப்புற வழிபாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். உண்மை படிப்படியாக வெளிப்படட்டும். நீங்கள் நேர்த்தியாக இந்தப் பாதையில் தீர்மானத்துடனும், உயர்ந்த மரியாதையுடனும், உண்மை, இரக்கம், மன்னிப்பு, கருணை ஆகியவற்றை ஒருபோதும் கைவிடாமல் தொடரும் போது, நீங்கள் நிச்சயமாக அருளின் அடியில் வந்துவிடுவீர்கள். எந்த விதச் சந்தேகமும் கொள்ள வேண்டாம்.

விடாத உழைப்பு மற்றும் சோம்பலின் இடையே, அனுபவித்தல் மற்றும் பலியாதலுக்குச் சம தூரத்தில் தான் ஆன்மீகச் சேவையின் அற்புதமான பாதை உள்ளது.

எனது அடுத்தப் பதிப்பில் ஆசைகளைப்பற்றி எழுத உள்ளேன். உங்களால் அதைக் கடைப்பிடிக்க முடிந்தால் நீங்கள் அடிப்படையில் ஒரு முக்கியமான மிகப் பறந்த மாற்றத்தை உணர்வீர்கள். காத்திருங்கள். அடுத்தப் பதிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் இருக்கப் போகிறது. நான், என் அடுத்தச் சாதனாவிற்குப் போகிறேன். அதைச் செப்டம்பர் இறுதிக்கு முன்னால் முடிக்க முடியாது.

நான் இப்போது சாப்பிடப் போகிறேன். அதைக் கொண்டு ஒரு குறிப்பு:
வாழ்க்கை ஒரு முழு சாப்பாடு போன்றது. நீங்கள் மிகவும் பசியாக இருக்கிறீர்கள், ஆகையினால் தான் முழு சாப்பாடு என்று முதலில் கூறினீர்கள். ஒருவேளை அது அதிக விலை இல்லை என்று தோன்றியிருக்கலாம் அல்லது அதில் உள்ள பல்வேறு வகை பதார்த்தங்களால் தூண்டப்பட்டிருக்கலாம். வாழ்க்கையில் உள்ளது போலவே ஒரு முடிவை எடுப்பதற்கு முன் உங்களுக்கு நீங்களே தொடர்ந்து காரணங்களை அல்லது சாக்குப்போக்குகளைக் கொடுத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் இப்பொழுது சாப்பாடு வருகிறது. ஆஹா!

எல்லா வகையிலும் சிறிதளவு உள்ளது, பாதிக்கு மேற்பட்டதில் மிகக் குறைந்த கவனமே உங்களுக்கு இருக்கும். சிலவற்றை உறிஞ்ச வேண்டும், சிலவற்றை மெல்ல வேண்டும், சிலவற்றைக் குடிக்க வேண்டும், இன்னும் சிலவகை நம்மால் தொடாமலேயே ஒதுக்கப்படுகின்றன. சிறப்புச் சாப்பாடு என்றால் அதில் இன்னும் அதிகக் காரப் பலகாரங்கள் மற்றும் இறுதியில் உண்ணும் இனிப்பு ஆகியவையும் அடுக்கப்படுகின்றன.

முதல் சில கவளங்களை மிகப் பெரியதாகவும், மிக விரைவாகவும் சாப்பிடுகிறீர்கள். பின்னால் வரும் கவளங்கள், முந்தையவற்றைப் போல் அவ்வளவு திருப்தியை அளிப்பதில்லை. ஒவ்வொரு கவளத்துடனும் முதலில் எடுத்துக் கொண்டதைப்போல் அதிகமான அளவு காய்கறி உணவைப் பின்னால் சேர்த்துக் கொள்வதில்லை. சாப்பிடும் ஆசை வேகமாகக் குறையத் தொடங்குகிறது.

இப்போது நீங்கள் பொதுவாக உங்களுடனேயோ அல்லது உங்களுடன் யாராவது வந்திருந்தால் அவர்களுடனோ ஒரு உரையாடலில் ஈடுபடுவீர்கள்: ஹா! ஏன் பனீரை இவர்கள் பொரிக்கிறார்கள்! அது கடினமாக ஆகிறது மற்றும் மென்மையாக இருக்காது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் அரிசிக்குப் பதிலாகக் கூடுதல் சப்பாத்தி கேட்டிருக்க வேண்டும். இந்தப் பொரியலில் ஒரு பெரிய துண்டு உருளைக்கிழங்குடன் இரண்டு காலிஃபிளவர் துண்டுகள் மட்டுமே இருக்கிறது பாருங்கள். இந்தப் பருப்பு நன்றாக இல்லை முதலானவை.

நீங்கள் இனிப்பைக் கடைசியில் சாப்பிடலாம் என்று ஒதுக்கி வைத்திருந்தீர்கள், ஆனால் இப்பொழுது வயிறு நிரம்பி விட்டதாக உணர்கிறீர்கள். இருப்பினும் அந்த இனிப்பிலும் சிறிது உண்கிறீர்கள், ஏனெனில் அதற்கும் சேர்த்து நீங்கள் பணம் செலுத்தியுள்ளீர்கள். நீங்கள் போனால் போகிறது என்று அதைப் போக விடமாட்டீர்கள், ஏனென்றால் அவ்வாறு பழக்கப்பட்டுள்ளீர்கள். காய்கறியில் ஒட்டியிருந்த எண்ணெயில் தோய்ந்த கையால், நீங்கள் கண்ணாடித் தம்ளரில் இருந்த தண்ணீரால் உங்கள் தாகத்தைத் தணிக்கத் தூக்குகிறீர்கள். ஒவ்வொரு கிண்ணத்திலும் எஞ்சி இருந்த எண்ணெய் உங்களுக்கு ஆரோக்கியமற்ற ஓர் உணர்வைக் கொடுக்கிறது. இப்போது சரியானத் தேர்வு தான் செய்தோமா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் அனைத்தும் முடிந்து விட்டது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இனி வரும் ஒவ்வொரு வாய்ப்பிலும், இதே முழுச் சாப்பாட்டைத் தான் நீங்கள் தேர்வு செய்யப் போகிறீர்கள்.

இதேபோல், வாழ்க்கையானது தேர்வுகள் பற்றியது என்றாகிறது. முதலில், இந்த உலகத்தின் மாயை மற்றும் மழுப்பலான சந்தோஷம் உங்கள் தட்டில் உள்ள பல்வேறு பண்டங்களைப் போல் உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் நீங்கள் சோர்வாகி விடுகிறீர்கள் — அனுபவிப்பதில் அல்ல ஆனால் இது போன்ற இன்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத இயலாமையால் சோர்வாகிறீர்கள். பூர்த்தியடையாத ஒரு நுட்பமான உணர்வு உங்களை விட்டு நீங்குவது இல்லை.

எதை விடுப்பது, எதை வைத்துக் கொள்வது என்பதில் நீங்கள் தெளிவுடன் இல்லை. உங்கள் உணவுத் தட்டைப் பகுப்பாய்வுச் செய்வதைப் போல் நீங்கள் வாழ்க்கையில் எடுக்கும் தேர்வுகளிலும் பகுப்பாய்வு செய்து கொண்டே இருக்கிறீர்கள். கடந்த கால மற்றும் எதிர்கால விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த எண்ணத்தை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள். அனைத்திலும் சிறந்ததைக் கடைசியில் அனுபவிக்க நினைக்கிறீர்கள், ஆனால் “கடைசி” வரும் போது முன்பிருந்த பசி இப்போது இருப்பதில்லை. ருசிக்கத் துடித்த நாக்கு உண்மையாக எவ்வளவு செரிமானம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு வழிவிட்டு விடுகிறது. கடைசியாக உங்கள் தாகத்தைத் தணிப்பது எதுவென்றால், அந்தக் கண்ணாடித் தம்ளரில் இருந்த தூயத் தண்ணீரே ஆகும். அதற்கு எந்த ஊட்டச்சத்து மதிப்போ, ஒரு விலையோ அல்லது திரும்ப நிரப்பிக்கொள்ள எந்த நிபந்தனையோ கிடையாது. அது இயற்கை கொடுத்தது, அதன் தூய்மைத் தன்மையே பூர்த்தியடைந்த உணர்ச்சிக்கான பிரதானக் காரணி ஆகும்.

போய் அனுபவியுங்கள்! ஒரு தட்டுச் சாப்பாட்டிற்கு உத்தரவிடுங்கள். உங்கள் ஆன்மாவிற்கும் அது போல் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?

சாப்பாடு இன்னும் வேணுமா?

அமைதி.
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – Bhakti – Devotional Service.

Pay Anything You Like

Suseela Ramachandran

Avatar of suseela ramachandran
$

Total Amount: $0.00