ஒன்றிரண்டு வாசகர்கள் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்:

கேள்வி: ஹரி ஓம் ஜி, ஆசையின் உண்மைத் தன்மையை விளக்கியதற்கும், பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. இது ஒரு நீர்ச்சுழலைப் போன்றதாகும்; நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஆசையினுடைய தொடக்கப் புள்ளியின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் அதில் சுழன்று கொண்டிருக்கிறோம். சுவாமிஜி, தயை கூர்ந்து அறிவுசார்ந்த ஆசைகளைப் பற்றி மேலும் நீங்கள் தெளிவுபடுத்த முடியுமா. “இந்த விதமான ஆசைகள் சமுதாயத்திற்காக மதிப்புமிக்க ஏதாவது ஒன்றை உருவாக்குகிறது. ஒரு தொண்டு நிறுவனம் உருவாக்குதல், ஒரு பொருள் அல்லது ஆன்மீக கண்டுபிடிப்பை நோக்கி வேலை செய்தல், ஒரு சமூக அல்லது சமயத்தின் காரணத்திற்காக அர்ப்பணித்தல் இவையாவும் அறிவுசார் ஆசைக்கான உதாரணங்கள் ஆகும்,” என்றும் நீங்கள் அடிக்கடி கூறியுள்ளீர்கள்.

சமூகத்திற்கு எதாவது நல்லது செய்வதையோ, தேவையில் இருக்கும் யாருக்காவது எந்தப் பலனையும் எதிர் பார்க்காமல் உதவி செய்வதையோ எப்படி அறிவுசார் ஆசையாக எடுத்துக் கொள்ளப்படும்? பெயர் / புகழ் ஆகியவற்றிற்காகச் சேவை செய்யும் மக்கள் நிச்சயமாக அகங்காரத்தைக் கொண்டு வருகிறார்கள். மூளையளவில் அல்லாமல் இதயபூர்வமாகச் சேவை செய்யும் மக்களுக்கு இதை நாம் எப்படித் தொடர்பு படுத்த முடியும்? மூளை யோசனையைக் கொடுத்து, நடவடிக்கைகள் பாவனையுடன் இருந்தால் அது எக்காலத்திலும் அறிவு சார்ந்த ஆசையுடன் இணைக்கப்படாது.

தயவு செய்து விளக்கவும். ஆசைகளை முதலில் புரிந்து கொண்டு பின்னர் அடக்க வேண்டும். அதன் பின்னர் ஆதிக்கம் செலுத்தி அதனை வெளியேற்றும் முன் முழுவதுமாக ஆட்கொள்ள வேண்டும். தியானத்தின் மூலம் நாம் மனத்தை ஒரு நிலைப்படுத்த முடியும். ஆகையினால் அதன்மூலம் ஆசையையும் ஒரு நிலைப்படுத்த முடியும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒவ்வொரு முறையும் எண்ணங்கள் நம்மை ஆதிக்கம் செய்தால் என்னவாகும்? அந்தச் சமயத்தில், நாம் ஒரு சிந்திக்கும் இயந்திரம் போன்றவர் என்பதை உணர்ந்து ஏமாற்றம் அடைகிறோம். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்கள் மனத்தை வழிக்குக் கொண்டு வர முடியவில்லையே என்ற அதிருப்தி இருக்கும். இது நம்மால் எப்படி முடியும்? நன்றி.

சபதம் (சங்கல்பா) மற்றும் ஆசையின்(இச்சா) இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். சபதம் என்பது ஒரு எண்ணம். அது நமது நடவடிக்கைகளை வரையறுக்கிறது. எனினும், சங்கல்பத்தினால் ஏற்படும் விளைவுகளின் மீது பற்றுதல் இருக்கும் போது அது சங்கல்பமாக இல்லாமல் ஆசையாக ஆகிறது.

விதிவிலக்கு இல்லாமல் என்னுடைய அனைத்துப் பதிவுகளிலும், ஆன்மீகப் பேறு அடைவதிலேயே என்னுடைய கவனம் உள்ளது. தியானம் (தியான யோகா) என்ற நிலையில் இருந்து பார்த்தால், இயல்பான அல்லது வகைப்படுத்தப்பட்ட அனைத்து விருப்பங்களும் தியானம் செய்பவரைக் கட்டுப்படுத்துகின்றன. ஒரு ஆசை நல்லதோ கெட்டதோ அது ஒரு சாதாரண குறியீடே ஆகும். அத்தகைய நடவடிக்கைக்கான சிந்தனை உங்கள் மனத்தில் முதலில் உதிக்காமல், இதயத்தில் இருந்து எதையும் செய்ய முடியாது. உத்வேகம் விரைவானது என்றாலும் அதுவும் முதலில் ஒரு சிந்தனையாகும். மனம் என்பதன் அர்த்தம் புத்தி இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

எண்ணங்கள் முதலில் ஆதிக்கத்தைச் செலுத்தும் ஆனால் பழக்கத்தினால் மனதையும் அதன் மூலம் எண்ணங்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அது எளிதாக வருவதில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பொறுமையும், விடாமுயற்சியும் விலைமதிப்பற்ற வெகுமதிகளைத் திருப்பித் தருகின்றன. நான் வரும் காலத்தில் தியானத்தில் பொதிந்துள்ள விஞ்ஞானம் பற்றி எழுதுவேன்.

நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்தால் பலனைக் காணலாம் என்பதை மட்டும் இப்போதைக்குத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை மனம் அலையும் போதும் தியானத்தின் புள்ளியை நோக்கி மிகவும் மெதுவாக உங்கள் மனத்தைத் திரும்பக் கொண்டு வாருங்கள். சிறிது காலத்திற்குப் பின் அல்லது நீண்ட காலத்திற்குப் பின், அலைபாய்வது நின்று விடும். இதற்குக் குறுக்கு வழியே கிடையாது! மனதில் அமைதியை அடைவது ஒரு அசாதாரண சாதனையாகும். அதற்குக் குறைந்த பட்சம் ஆரம்பத்திலாவது நிச்சயமாக மிகப் பெரிய அளவில் முயற்சி தேவை.

கேள்வி: நமஸ்தே சுவாமிஜி, உங்களின் வலைப்பதிவுகளைப் படிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். பல்வேறு விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. என்னிடம் இரண்டு கேள்விகள் உள்ளன. ஆத்ம ஞானத்திற்கும், உண்மை இயல்பை அறிவதற்கும் இடையேயான வேறுபாடு என்ன? நாம் “அகம் ப்ரம்மாஸ்மி” என்று சொல்வதன் அர்த்தம், ஆத்மஞானமும், ப்ரம்மஞானமும் ஒன்றே என்பதா? நாங்கள் உங்கள் ஆலோசனையைப் பெற விழைகிறோம். வணக்கங்கள்.

ஆத்ம ஞானம் என்பதும், உன்னுடைய உண்மையான இயல்பை அறிந்து கொள்ளுதல் என்பதும் ஒன்றே ஆகும். நீங்கள் யார் (ஆத்மா) என்பதை நீங்கள் அறியும் போது (ஞானம்) அதுவே ஆத்மஞானம் ஆகும். ப்ரம்மஞானமும், ஆத்மஞானமும் ஒரே மாதிரியானவையாகும். இவ்வாறு புரிந்து கொள்ளுதல் அறிவுசார்ந்ததாக மட்டும் இருக்கக் கூடாது என்பதைத் தயவு செய்து நினைவில் கொள்ளவும். இது புத்தியால் கிரகிப்பதற்கும் அப்பாற்பட்டதாகும். அதன் உதயத்திற்காக விடாமல் முயற்சிக்க வேண்டும். நான் பகவத் கீதையில் இருந்து ஒரு சில வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ஆனால் நான் தற்போது அப்படியே மொழி பெயர்க்கும் ஆதரவு இன்றி உள்ளேன்.

மேலும், நான் சில கட்டுரைகளை அட்டவணைப் படுத்தி உள்ளேன். எதிர் பார்த்திருங்கள்.

ஹரே கிருஷ்ணா
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – Mind, Thoughts, and Desires.