வாழ்க்கை ஒரு இசைக் கருவியைப் போன்றது. அது இசைப்பவரைப் பொறுத்து இனிமையான அல்லது அருவருப்புக்குரிய ஒலிகளைத் தருகிறது. சில கருவிகளுக்கு விரல்களின் சரியான ஸ்திரத்தன்மையும், மற்றவற்றுக்கு அதிகத் திறமையும் தேவையாக உள்ளது. சிலவற்றை அடிக்கவும் அதே நேரத்தில் பலவற்றை நீங்கள் ஊதவும் வேண்டி உள்ளது. ஒவ்வொன்றின் இசையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். அவற்றில் சில தலைசிறந்து தனித்துவமானதாக இருக்கிறது. சில எப்போதும் மற்றவற்றுடன் சேர்ந்து இசைக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலவகை மிகவும் பலரறிந்தவை. மற்றவை பிரபலமானவை, இன்னும் பல மிகவும் தெளிவில்லாதவைகளே.

ஒரு நிபுணரின் கைகளில், அந்தக் கருவி உயிரோட்டம் பெறுவதாகத் தெரிகிறது; அதனால், அந்தக் கருவியையா அல்லது இசைப்பவரையா யாரைப் பாராட்டுவது என்று தெரிந்து கொள்வது கடினமாகிறது.

சில கருவிகள் சாதாரணத்தை விடப் பெரியதாகவும் பல தாளைத் தைக்கும் முள் கருவியை விடச் சிறியதாகவும் இருக்கின்றன; இதே போல் தான் இசைப்பவர்கள் மற்றும் அவர்களது மனோநிலையும் கூட உள்ளது. உள்ளார்ந்து பார்த்தால், ஒரு கருவி அதற்கென்று எந்தச் சாரமும் அற்றதாக உள்ளது. இசைப்பவர் தான் எப்போதும் அதில் வரும் ஒலியைப் பாய்ந்தோடும் நதி போலவோ அல்லது விழும் பாறைகளைப் போலவோ எழச் செய்கின்றார். எந்த இசைக் கருவியாக இருந்தாலும் அது நமக்கு மிகக் குறைந்த தேர்வுகளையே தான் அளிப்பதாகத் தெரிகிறது — ஒரு டிரம்மிற்கு ஒரு ஜோடி குச்சிகள் அல்லது ஏழு அல்லது எட்டு ஸ்வரங்கள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு குறிப்புகள் மட்டுமே உள்ளன. இதைக் கொண்டு எவ்வளவு மாறுபட்ட வழிகளில் அவற்றை நீங்கள் இசைக்க முடியும். ஆனால், ஒரு ராகத்தை விட மற்றொரு ராகத்தை மேலும் இனிமையாக ஒலிக்க வைக்க அந்த இசைக் கலைஞரால் முடியும் என்று நம் அனைவருக்கும் தெரியும். என்ன ஒரு அதிசயம்! முற்றிலும் அதே போல் தான், வாழ்க்கையும் நீங்கள் எப்படி இசைக்கிறீர்களோ அப்படியே இருக்கிறது.

இசைக்கலைஞர்கள் எப்போதும் மிகவும் புதிரான, மயக்கும், தனிப்பட்ட ராகத்தை வாசிக்கிறார்கள் — உங்கள் ஆன்மாவைக் கலக்கும் ராகங்கள், உங்களை அழவைக்க அல்லது சிரிக்கவைக்கக் கூடிய ராகங்கள், நீங்கள் உணர்ந்திருக்கவே முடியாத ராகங்கள் போன்றவற்றால் அவர்கள் தொடர்ந்து உலகை ஆச்சரியமடைய வைக்கிறார்கள். உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ஒலிப்பதிவுகள், வாத்திய இசை அல்லது வேறு விதமானவைகள் இருப்பதை வேறு எவ்வாறு விளக்க முடியும். மொஸார்ட் அல்லது பீத்தோவன் இதுவரை வாசித்துள்ள அனைத்து ராகங்களையும் உங்களால் வாசிக்க முடியும் என்றால், அது மிகவும் போற்றத்தக்கதாக இருப்பினும், உலகத்தால் நீங்கள் பாராட்டப்படுவதற்கோ அல்லது அதனுடைய வரலாற்றில் ஒரு இடத்தை வழங்கப்படுவதற்கோ போதுமானதல்ல.

எனினும், நீங்கள் உங்களது சொந்த இசைகளில் மட்டுமே அற்புதமாகவும் அல்லது பெரிய அளவிலும் சிறப்பாகச் செயலாற்றி, தரத்திலோ அல்லது அளவு ரீதியாகவோ, கடந்த கால ஏதாவது ஒரு மாபெரும் மேதையை விஞ்சி இருந்தால் உலகம் உங்களது தனித்தன்மையை மதிக்கும். அனைத்துத் துறைகளிலும், யாரெல்லாம் தனது சொந்த கண்ணோட்டம், தத்துவம் அல்லது கோட்பாடுகளைக் கொண்டு வருகிறார்களோ, அவர்களே சமூகம் முன்னோக்கி நகரவும் உதவி செய்கிறார்கள்.

சென்று வாசியுங்கள்! ஆனால் உங்களது சொந்த ராகத்தை வாசிக்க வேண்டும். உங்களது சொந்த இசையை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்களது சொந்த புகழ் பாடுவதைத் தவிர்த்து விடுங்கள். உங்களின் சொந்த குரலைச் சேர்க்கவும். தேவைப்பட்டால், முதலில் பயிற்சியை எடுத்துக் கொண்டு, எப்படி நன்றாக வாசிப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், என்ன வாசிக்க வேண்டும் என்று ஒருபோதும் யாரிடமும் பயிற்சி எடுக்காதீர்கள் – நீங்களே அந்த முடிவை எடுப்பவராக இருக்க வேண்டும். உங்களுக்குள் புதைந்துள்ள மிக அழகான இசையை, உங்களது உள்மனதின் குரலைச் சேர்த்து இசையுங்கள். நன்றாகப் பயிற்சியடைந்துவிட்டால், உங்களால் மயக்கக் கூடியதும், இனிமையானதும் மற்றும் பேரார்வத்துடனுமான இசையை உருவாக்க முடியும். இதைக் கேட்டதும் உங்கள் உள்குரல் தானாகவே மிகவும் தனிப்பட்ட மற்றும் விழுமிய முறையில், சுயமான மற்றும் தனித்தன்மையுடையதாக தானாகவே ஒலிப்பதைக் கண்டுபிடிக்கும்.

வேறு யாருடைய இசையையும் இசைக்க வேண்டாம். உங்களது சொந்த இசைக் கருவியைத் தேர்ந்தெடுத்து, உங்களது சொந்த இசையை வாசியுங்கள். ஏன், உங்களது சொந்த இசைக்குழுவை முதன்மைக்குக் குறையாமல், பிரம்மாண்டத்திற்குக் குறைவில்லாத பாணியில், ஈடுஇணையில்லாத மகிமையுடன் நடத்துங்கள். ஆனால், இதற்கு நிச்சயமாக உள்நோக்கித் திரும்புவது தேவைப்படுகிறது!

தயவு செய்து, மற்றவர்களின் நலனைக்கருதி, ஒரு பொதுக் கச்சேரி — குளியலறையில் இருந்து வெளியே காலடி வைக்கத் தயாராகி, பொருத்தமான அங்கி அணிந்த பின்னரே செய்யுங்கள்.

அமைதி.
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – Life is Like a Musical Instrument.