ஒரு வாசகர் சில நாட்களுக்கு முன் பின்வரும் கேள்வியைக் கேட்டிருந்தார். நீண்ட கருத்துடனான மதிப்புள்ள ஒரு கேள்வி:

“கடவுள் – இராமா, கிருஷ்ணா, கிறிஸ்து அல்லது வேறு எந்த வடிவத்திலாவது இந்தக் கிரகத்தை அருள்பாலித்தார் என்ற நம்பிக்கை, உங்களது உள் அமைதியைக் கண்டறிய உதவுகிறது என்றால், அத்தகைய நம்பிக்கையானது நீங்கள் நேர்மையுடனும் கருணையுடனும் நடக்க உதவுகிறது என்றால், அந்த நம்பிக்கை உங்களை ஒரு நல்ல மனிதனாகவும், இந்த உலகத்தை ஒரு நல்ல இடமாக ஆக்க ஊக்கமூட்டுவதாகவும் உள்ளது என்றால் நீங்கள் அந்த நம்பிக்கையைப் பற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.”

பிரபு, மேலே உள்ளவை உங்களுடைய வார்த்தைகள் ஆகும். இதைப்பற்றி என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. ஒரே ஒரு உண்மை தான் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நல்லது அல்லது கெட்டது, உலர்ந்தது அல்லது ஈரமானது, இதில் ஏதாவது ஒன்று தான் இருக்க முடியும். இதுவே உண்மையாகும். உள்மன அமைதிக்கு உதவுவதற்காக நீங்கள் பார்க்க விரும்பும் வடிவத்தைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்லும் போது வெவ்வேறு தனிநபர்களுக்கு ஏன் அது வேறுபட்டு இருக்கிறது. நாம் நம் மனதை அமைதிப் படுத்துவதற்காக மட்டுமே இதைச் செய்கிறோம், ஆனால் உண்மை என்று ஒன்று உள்ளதென்றால் அது ஒரே ஒரு வடிவத்தில் தான் இருக்க வேண்டும் வெவ்வேறு வடிவங்களில் அல்ல.

பிரபு, பெரும்பான்மையானவர்கள் வெவ்வேறு வடிவங்களை நம்புகிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது அல்லது அவர்களது பெற்றோர்களால் போதிக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன். மேலும் ஒரு பழக்கமே நம்பிக்கையாக மாறிவிடுகிறது. ஆனால் நீங்கள் உணர்ந்ததைப் போல், உணராததை மற்றும் உண்மையைப்பற்றி அறியாததை ஒருவர் நம்புவது உண்மையாக இருக்க முடியாது.

ஒரே ஒரு உண்மை தான் இருக்க முடியும் என்றும் ஒவ்வொருவரும் அதை நம்பிப் பின்பற்ற வேண்டும் என்றும், பல்வேறு உருவங்கள் மற்றும் வடிவங்களை நம்பும் தனிநபர்களும் ஏதாவது ஒன்றையே நம்ப வேண்டும் மற்றும் அதுவே உண்மையாக இருக்க வேண்டும் என்றும் நான் சொல்கிறேன். இந்த உண்மையை எடுத்துக்காட்டி, உள்ளதை உள்ளவாறே தெரிந்து கொள்ள நீங்கள் வழிகாட்ட வேண்டும் என்று உண்மையில் நான் விரும்புகிறேன். எல்லோரும் வடிவம் வேறுவேறு என்று நினைப்பதை நான் விரும்பவில்லை. ஏனென்றால் உண்மையை நான் அறிய வேண்டும் மற்றும் நம்புவதற்கு அதை நான் பார்க்க வேண்டும், அதன் பின்னர் ஒரு வடிவம், முகம் அல்லது அதன் பிம்பம் என்று கொடுப்பது உண்மையானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

நான் கேட்பது மிகவும் அதிகம் என்று எனக்குத் தெரியும். இதை முடிக்க எந்தக் குறுகிய வழியும் இல்லாததால் அதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறேன். தயவுசெய்து எங்களுக்கு வழிகாட்டவும்.

உங்கள் கேள்விக்குச் சரியான பதில் அளிக்க, நான் அந்தக் கேள்வியைப் பிரிக்கப் போகிறேன். நீங்கள் கேட்பதிலிருந்து நான் என்ன அடையாளம் காண்கிறேன் என்றால்:

இறுதியான உண்மை, உயர்ந்த வடிவம் கொண்ட அந்த ஒரே உண்மை என்பது என்ன?

வடிவம் என்பது ஒரு தனிப்பட்ட நூதனக் காட்சி அல்ல. அது பார்வை மற்றும் உணர்வின் ஒரு தயாரிப்பு ஆகும். ஒருவர் குருடாக இருந்தால், அவரால் வடிவங்களைப் பார்க்க முடியாது. ஒருவர் மயக்கத்தில் இருந்தால், அவரால் எந்த வடிவத்தையும் உணர முடியாது. எட்டு பேர் ஒரு குழுவில் இருப்பது போலவும் மற்றும் உங்கள் முன் ஒரு ரோஜா இருப்பது போலவும் ஆழ்ந்து சிந்தனை செய்து கொள்ளுங்கள். குழுவில் இருந்த எட்டு உறுப்பினர்களும் வெவ்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த ரோஜா அவர்களுக்கு என்ன உணர்த்துகிறது, மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறது என்று கேளுங்கள். ஒவ்வொருவரும் என்ன சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்தும் வெவ்வேறு பதிகள் கிடைக்கும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும்.

ஒரே ஒரு உண்மையின் இருப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் – நல்லது அல்லது கெட்டது, உலர்ந்தது அல்லது ஈரமானது போன்ற பலவகை. நிச்சயமாக இவற்றை மீறித் தான் நாம் ஆழ்நிலைக்குச் செல்ல வேண்டும். இவையே வடிவமைக்கப்பட்ட மனதின் இரட்டைகள் மற்றும் வெளிப்பாடுகள் ஆகும். வெளி நிகழ்வுகளின் உண்மையானது ஒன்றையொன்று சார்ந்துள்ளது மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

உலகின் மற்றொரு பகுதியில் பன்னிரெண்டு மணி நேரம் பின்னால் உள்ள யாரோ ஒருவரை நீங்கள் அழைப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் இரவு எட்டு மணிக்கு அழைத்தால் அது மறு பக்கத்தில் இருப்பவருக்குக் காலை எட்டு மணி ஆக இருக்கும். நீங்கள் இப்பொழுது இரவு என்றும் வானத்தில் நட்சத்திரங்கள் உள்ளன என்றும் சொல்கிறீர்கள். மற்றவர் அது உண்மையில் நீல வானத்துடன் இருக்கும் ஒரு பிரகாசமான நாள் என்று சொல்கிறார். இருவரில் யார் உண்மையைச் சொல்கிறார்கள்? ஒருவரும் இல்லையா, ஒருவரா அல்லது இருவருமா? இதைப் போன்ற உண்மைகளின் இயற்கைத் தன்மையை உணர்வதும், அதைக்கடந்து அதற்கு மேலும் உயர்வதும் தான் சுய உணர்தல் ஆகும்.

எப்படி ஒரே ஒரு பூர்ண வடிவம் இருக்க முடியும்? வடிவம் என்பது ஒரு வெளிப்புற காட்சி ஆகும், உங்களது உண்மையான இயல்பு இதைப் போன்ற காட்சிகளிலிருந்து சுதந்திரமானதாகும். இதனால் தான் எந்த ஒரு வடிவத்தின் மீதான நம்பிக்கையாவது உங்கள் சொந்த உண்மையைக் கண்டறிய உங்களுக்கு உதவுகிறது என்றால், அதுவே ஒரு நல்ல தொடக்கம் என்று சொல்கிறேன். உங்கள் கண்டுபிடிப்புதான் ஒரே வழி என்று நீங்கள் நம்புகின்ற போது, அது இன்னும் கண்டுபிடிப்பு அல்ல என்று உறுதியாக இருங்கள். ஏனெனில், இது போன்ற நம்பிக்கையை இன்னும் தேக்கி வைத்திருந்தால் அது உண்மையை இன்னும் உணரவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஒரே உண்மை அல்லது பூர்ண வடிவம் என்று கேட்பதன் மூலம், உங்களை வடிவமைக்கும் ஒரு பதிலைக் கொடுக்கும்படி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். இது சுய கண்டுபிடிப்பிற்கான ஒரு பயணம் ஆகும், சுய வடிவமைப்பிற்கானது அல்ல. பல்வேறு மதங்களில் உள்ள மிக உயர்ந்தவர்கள் வழியை மட்டுமே காட்டியுள்ளனர். அவர்களது பாதையில் செல்வது வெறும் ஒரு துவக்கம் தான்.

வேறு ஒருவருடைய சித்தாந்தத்திற்கு ஏன் அடிமையாக வேண்டும்? இலக்கை அடைய அமைதி, பொறுமை, முயற்சி, சீரான தன்மை மற்றும் நம்பிக்கை அவசியம். இந்த ஐந்தையும் உங்களுக்குள் வளர்க்கும் எந்த ஒரு நம்பிக்கையும் ஒரு நியாயமான தொடக்கப் புள்ளியாக மாறுகிறது. சங்கராச்சாரியார் இருமை அல்லாத அத்வைதத்தின் ஒரு வலுவான ஆதரவாளராக இருந்தார். இருமை அல்லாதது என்பது இறைவனும், நானும் ஒன்றே என்று குறிக்கிறது. அதே நேரத்தில், எண்ணற்ற பக்திப் பாடல்களை இருமை பாவனையில், வெளியே உள்ள கடவுளின் ஒரு வடிவத்தைப் பக்தியின் உணர்வில் வணங்கும் பாவனையில் இயற்றினார். இந்த இரண்டில் எது சரியானது? இரண்டுமே.

அடுத்தச் சில வாரங்களில் வெளிவருவதற்குத் தயாராக உள்ள சில பதிவுகள் இந்தக் கேள்விக்கு மேலும் விளக்கம் அளிக்கும்.

அமைதி.
சுவாமி

*****

This is a translation of Swamiji’s post – The Ultimate Form.